மீண்டும் மீண்டும் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதாகக் கூறும் மலேசிய இயற்கைச் சங்கம் (Sahabat Alam Malaysia), இந்தத் துயரச் சம்பவத்தைத் தடுக்கத் தவறியது ஏன் என்பது குறித்து பினாங்கு மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பினாங்கு, பயா தெருபோங், தாமான் ஸ்ரீ ரம்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் டாக்டர் வோங் கார் லின் (73) உயிரிழந்தார். வீட்டில் இருந்த மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாயா தெருபோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 73 வயதான மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின் ஆபத்துகள் குறித்து தாங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்ததாகக் கூறி, பினாங்கு மாநில அரசை மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைப்பான சஹாபாட் ஆலாம் மலேசியா (SAM) கடுமையாக விமர்சித்துள்ளது.
SAM அமைப்பின் தலைவர் மீனாட்சி ராமன் கூறுகையில், அந்தப் பகுதியில் மலைகளை அதிகளவில் வெட்டிச் சமப்படுத்துவது குறித்தும், அதனால் அருகிலுள்ள வீடுகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்டகாலமாகக் கவலை தெரிவித்து வந்துள்ளனர்.
பாயா தெருபோங் ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியாக அறியப்பட்டிருப்பதால், அங்குள்ள மலைச்சரிவுகளில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் ஒருமுறை நாங்கள் கூறியது சரி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று டாக்டர் வோங் கார் லின் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்த அவர், FMT செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், இந்த நிலச்சரிவு எவ்வாறு ஏற்பட்டது, அதை ஏன் முன்கூட்டியே தடுக்க முடியவில்லை என்பதற்கு பினாங்கு மாநில அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மீனாட்சி வலியுறுத்தினார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதியின் புகைப்படங்களில் மலைச்சரிவுகள் வெறுமையாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மலைச்சரிவுகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டனவா, நிலச்சரிவைத் தடுப்பதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நிறுவனம் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அதன் மீது அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் தண்டனையின்றித் தப்பிக்க அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பாதிக்கப்பட்ட மலைச்சரிவுகளை நிலைப்படுத்தும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீனாட்சி தெரிவித்தார்.
பாயா தெருபோங்கில் உள்ள தாமான் ஸ்ரீ ரம்பாய் பகுதியில், டாக்டர் வோங் வசித்து வந்த வீட்டின் பின்புறத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவி உட்பட வீட்டில் இருந்த மேலும் இருவர் உயிர் தப்பினர்.
நிலச்சரிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அருகிலுள்ள ஒரு கொண்டோமினியம் கட்டுமானத் திட்டத்தின் பணிகளை நிறுத்துமாறு பினாங்கு தீவு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த நிலச்சரிவுக்கும் அந்தக் கட்டுமானத் திட்டத்திற்கும் இடையே இதுவரை எந்தத் தொடர்பும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வோங் ஹொன் வை தெரிவித்துள்ளார்.
























