ஷாரிசாட் பதவியிலிருந்து தூக்கப்படுவாரா?

நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன் (என்எப்சி)மீது விசாரணை நடப்பதால் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர்  ஷாரிசாட் அப்துல் ஜலில், மூன்று வார விடுப்பில் சென்றுள்ளார். அவர் விடுப்பில் சென்றாலும் சென்றார் அதைப்பற்றித்தான் எங்கும் பேச்சாக உள்ளது.

விடுப்பில் செல்வதாக அவர் அறிவித்த மூன்றாம் நாள் அது பற்றிக் கருத்துரைத்த மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கியாட் சியாங், ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவார் என்று ஆருடம் கூறினார். ஏன் என்பதை அவர் விளக்கவில்லை.

பிஎன் வட்டாரங்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஷாரிசாட்டுடன் தொடர்ப்புப்படுத்தப்படும் என்எப்சி ஊழல் விவகாரம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீரமைப்புத் தோற்றத்தைக் கெடுக்கும் கரும்புள்ளியாக இருக்கிறது என அவை மலேசியாகினியிடம் தெரிவித்தன. இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அமைச்சராக வைத்திருந்தால்,புத்தெழுச்சி பெற்றுவரும் பக்காத்தான் ரக்யாட் அதையே பிடிபிடியென்று பிடித்துக்கொண்டு அரசாங்கத்தை வறுத்தெடுத்து விடும்.

இது ஒரு சிக்கல்தான். என்றாலும் நஜிப் இதிலிருந்து விடுபடவும் ஒரு வழி இருப்பதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. நஜிப், மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பின்னரே தேர்தல் என்று உறுதி கூறியுள்ளார். அதன்படி நடந்துகொண்டால், மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில்,ஏற்கனவே மிகுந்த கண்டனத்துக்கு இலக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ஐஎஸ்ஏ) ரத்துச் செய்தும் புதிய சீரமைப்புச்  சட்டங்கள் சிலவற்றை அறிமுகம் செய்தும் அவர் நல்ல பெயரைத் தேடிக்கொள்ளலாம்.

மேலும், ஜமில் கீர் பஹாரோம்,ஆவாங் அடெக் உசேன், கோ சூ கூன் ஆகியோருடன் ஷாரிசாட்டின் செனட்டர் தவணைக்காலமும் ஏப்ரல் 8-இல் முடிவுக்கு வருகிறது.

ஷாரிசாட் அமைச்சராக இல்லை என்றால் என்எப்சி விவகாரம் பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தாது என்று நஜிப் கருதினால் தேர்தலுக்கு முந்திய அமைச்சரவை பட்டியலில் ஷாரிசாட் இடம்பெறுவதைத் தவிர்க்க அவரின் செனட்டர் பதவியை நீட்டிக்காமல் விட்டுவிடலாம்.

ஆனால், ஏப்ரல் 9-க்கு முன்னதாக தேர்தலை நடத்த நஜிப் முடிவு செய்தால், ஷாரிசாட்டை அமைச்சர் பதவியிலிருந்து தூக்காமலேயே தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவார் என்று லிம் கூறியிருப்பது சரியா என்று இரண்டு அரசியல் ஆய்வாளர்களிடம் மலேசியாகினி வினவியது. இருவரும் லிம்மின் ஆருடம் தப்பு என்கிறார்கள்.

“அமைச்சரவை திருத்தி அமைக்கப்படும் வாய்ப்பு இல்லை.தேர்தலுக்குப் பின்னர் அவர்(நஜிப்) அதைச் செய்ய முடியும்”, என்று சுயேச்சை கருத்துக்கணிப்பு மையத் தலைவரான இப்ராகிம் சுபியான் கூறினார்.

நஜிப், அமைச்சரவையைத் திருத்தி அமைத்து உயர் அமைச்சர்கள் சிலரைத் தூக்கினால், அது பிஎன் தேர்தல் இயந்திரத்தில் பாதிப்பை உண்டுபண்ணலாம் என்று இப்ராகிம் கருதுகிறார்.

அவரது கருத்தையே அரசியல் ஆய்வாளர் கூ கே பெங்கும் எடுத்தொலித்தார். அமைச்சரவை மாற்றத்தைத் தவிர்க்கவே நஜிப் விரும்புவார்.இப்போதைய நிலையில் அமைச்சரவை திருத்தம் அம்னோவை நிலைகுலைய வைக்கும் என்றவர் கருதுகிறார்.

“ஒரு குறிப்பிட்ட அமைச்சரை நஜிப் நீக்கினால் அம்னோவில் உள்ள குறிப்பிட்ட ஓர் அணிக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார் என்று நினைப்பார்கள்”, என்றவர் தெரிவித்தார்.

அம்னோவில் நிலைத்தன்மை நீடிப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், பிஎன் பங்காளிக்கட்சிகள் பலவீனமாக இருப்பதால் தேர்தல் பொறுப்பின் பெரும்பகுதியை அம்னோதான் தோளில் சுமக்க வேண்டியிருக்கும். 

முதல் தவணை செனட்டரான ஷாரிசாட், அம்னோ மகளிர் தலைவி.மகளிர் தலைவியான அவருக்குக் கணிசமான செல்வாக்கு இன்னமும் உண்டு.எனவே, அவரைப் பதவியிலிருந்து அகற்றி அதன்வழி அம்னோவில் சமநிலை சீர்குலைய வைக்கும் முயற்சியில் நஜிப் ஈடுபட விரும்ப மாட்டார்.

அம்னோவுக்குள்ளேயே போட்டித் தரப்புகள் அம்னோ அமைச்சர்கள், துணை அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறிவருவதை கூ சுட்டிக்காட்டினார்.

ஜமில், ஆவாங் ஆகிய அம்னோ முக்கிய புள்ளிகள் ஸக்காத் நிதிகளில் முறைகேடுகள் செய்ததாகவும் அரசியல் நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் குறைகூறப்பட்டுள்ளது.

இப்படி உள்ளுக்குள் சில பிரச்னைகள் இருந்தாலும் அவை தேர்தலைப் பாதிக்காத வண்ணம் நஜிப்  சமாளிக்கவே பார்ப்பார் என்று கூ  கூறினார். ஒருவேளை அவரது முடிவு வாக்காளர்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தினால், இலவசங்களை வாரி வழங்கியும் டிரஸ்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வாக்காளர்கள் மனம் கவரும் முயற்சியில் அம்னோ ஈடுபடும் என்றாரவர்.

TAGS: