சாலைக்கட்டண ரத்துமீது வாதிடத் தயாரா? நோர் முகம்மட்டுக்கு லிம் சவால்

சாலைக்கட்டணத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறும் பிரதமர்துறை அமைச்சர் நோர் முகம்மட் யாக்கூப் அதன்மீது தம்முடன் வாதமிடத் தயாரா என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சவால் விடுத்துள்ளார்.

சில இடங்களில் சாலைக்கட்டணத்தை ரத்துச் செய்ய முடியும் என்று கூறிய லிம், அது பற்றி எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பொருளாதாரப் பிரிவுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரான நோர் முகம்மட்டுடன் வாதமிட தயார் என்று கூறினார். 

“நான் ‘சாலைக்கட்டணம் ரத்துச் செய்யப்பட வேண்டும்’ என்ற விவகாரம் பற்றியும் அல்லது ‘சாலைக்கட்டணத்தை ரத்துச் செய்தால் மலேசியா நொடித்துப்போகும் என்பது உண்மையா’ என்பது பற்றியும் விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன்”.

அதனால்தான் பக்காத்தான் அடுத்த அரசாங்கத்தை அமைத்தால் சாலைக்கட்டணத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பக்காத்தான் ரக்யாட் மாநாட்டில் தாம் பரிந்துரை செய்ததாக லிம் கூறினார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை அமைப்பதற்கு பிளஸ் நிறுவனம் ரிம6பில்லியன் செலவிட்டது என்று குறிப்பிட்ட லிம், 2010 டிசம்பர் 31 முடிய சாலைக்கட்டணமாகவும் அரசாங்கம் வழங்கிய இழப்பீடுகள் என்ற வகையிலும் அது திரும்பப் பெற்றுக்கொண்ட தொகை ரிம24.27பில்லியன் என்றார்.

“இது, 308விழுக்காடு ஆதாயத்தைக் காட்டுகிறது.சாலை ஒப்பந்த நிறுவனங்கள் இப்படிக் கொள்ளை லாபம் அடைந்திருக்கும்போது அவர்கள் மேலும் கொளுப்பதற்கு நம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் துன்புற வேண்டுமா?”, என்றவர் வினவினார்.

பிளஸ் நிறுவனம், 50 ஆண்டுகளுக்கு சாலைக்கட்டணம் வசூலிக்க உரிமை பெற்றுள்ளது.