பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்தின் கொள்முதல்களையும் ஆய்வு செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை புலனாய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்று நியமிக்கப்படவிருப்பதை பிகேஆர் வரவேற்றுள்ளது.

என்றாலும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

அந்த ஆய்வில் குத்தகை வழங்கப்பட்ட காலம் தொடக்கம் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வில் சேர்க்கப்பட வேண்டும் என பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில் ஒர் அறிக்கையில் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“என்எப்சி நிதிகள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை நிர்ணயம் செய்வதற்கு ஷாரிஸாட் குடும்பத்தினர் தங்கள் பெயர்களில் வாங்கிய கொள்முதல்களும்” அதில் அடங்கும்.

என்எப்சி-யும் அமைச்சருடைய குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் செலுத்திய அனைத்து பெரிய தொகைகளும் கணக்காய்வில் உள்ளிட்டிருக்க வேண்டும் என ராபிஸி வலியுறுத்தினார்.

“என்எப்சி-உடன் வர்த்தகம் செய்த விநியோகிப்பாளர்கள், தனி நபர்கள் ஆகியோரது பின்னணியை உறுதி செய்வதற்கும் ஷாரிஸாட் அல்லது இதர எந்த தனி நபருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு என்எப்சி நிதிகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கும் அது உதவும்,” என அவர் மேலும் கூறினார்.

அந்த என்எப்சி ஊழலை அம்பலப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் கணக்காய்வின் முடிவுகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் கணக்காய்வளராகப் பயிற்சி பெற்றுள்ள ராபிஸி சொன்னார்.

“கணக்காய்வில் நாங்கள் தெரிவித்துள்ள பணிகள் சேர்த்துக் கொள்ள மறுத்தால்  என்எப்சி ஊழலைத் தீர்க்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையாக எண்ணவில்லை எனப் பொருள்படும்,” என்றார் அவர்.

அந்த நிலை ஏற்பட்டால் அந்த விவகாரம் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டதற்கு பிகேஆர் ஆதரவளிக்கும் என்றும் ராபிஸி கூறினார்.

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயிலும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் நடத்தி வருகின்ற  என்எப்சி -யை நம்பிக்கை மோசடிக்காக போலீஸும் விசாரித்து வருகின்றது.

கால்நடை வளர்ப்புத் திட்டத்துக்காக எளிய நிபந்தனையுடன் 250 மில்லியன் ரிங்கிட் கடனைப் பெற்ற அந்த நிறுவனம் “முதலீட்டு” நோக்கத்துக்காக அந்தக் கடன் நிதியைப் பயன்படுத்தி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளது.

TAGS: