குறைந்தபட்ச சம்பளம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் சுப்ரா

தனியார் துறையில் குறைந்த பட்ச சம்பள முறை அமலாக்கப்பட்டால் பொது மக்கள் மீது சிறிதளவு மட்டுமே எதிர்மறையான தாக்கத்தையே அது கொண்டிருக்கும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக மனித வள அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.

சிறிதளவு மறைமுகமான தாக்கம் இருந்தாலும் இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பெரிய பிரச்னையாக அது மாறாது என்பதை அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

“நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். சிறிதளவு, மறைமுகமான தாக்கம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். என்றாலும் அது பெரிய பிரச்னையாக மாறாது. காரணம் எதிர்நோக்கப்படும் மற்ற பிரச்னைகளுடன் ஒப்பிடுகையில் அந்தச் சம்பள முறையை அமலாக்குவதால் பொது மக்களுக்கு கூடுதலாக நன்மைகள் கிடைக்கும்,” என அவர் நிருபர்களிடம் சொன்னார்.

டாக்டர் சுப்ரமணியம் அதற்கு முன்னதாக ஈப்போவில் “மலேசியாவை உயரிய வருமானத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதில் தொழிற்சங்கங்களின் பங்கு” என்னும் தலைப்பைக் கொண்ட கருத்தரங்கை தொடக்கி வைத்தார்.

குறைந்தபட்ச சம்பள முறையை அமலாக்குவது மீது பூர்வாங்க ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்றத்தில் அதனைச் சமர்பிப்பதற்கு முன்பு அமைச்சரவை அங்கீகாரத்துக்கு சமர்பிப்பதற்கான ஏற்பாடுகளை தமது அமைச்சு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பெர்னாமா