பேராக் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இறுதி நாளை தங்களது பேராக் மாநில அரசாங்கம் வீழ்த்தப்பட்டதின் மூன்றாம் ஆண்டு நிறைவை ‘துக்கத்துடன்’ அனுசரித்தனர்.
ஈப்போ மேடான் இஸ்தானாவில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அவர்கள் இன்று சிறிது நேரம் ஒன்று கூடினர். பக்காத்தானில் உள்ள மூன்று கட்சிகளையும் சார்ந்த அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற உடையையும் அணிந்திருந்தார்கள். அவர்கள் ஒரு நிமிடம் மௌனமும் அனுசரித்தனர்.
அந்த மரத்தின் கீழ் தான் அவர்கள் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநிலச் சட்டமன்றக் ‘கூட்டத்தையும் நடத்தினார்கள்.
தேசிய கீதத்தைப் பாடிய பின்னர் பலர் உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து பக்காத்தான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக எழுச்சியைக் குறிக்கும் வகையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
பிப்ரவரி 6ம் தேதி மலேசிய வரலாற்றில் துயரமான நாள் என அந்த நிகழ்வுக்குப் பின்னர் தொடர்பு கொள்ளப்பட்ட போது முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் கூறினார்.
பேராக் சட்டமன்றத்தில் நிஜாருக்கு பெரும்பான்மை இல்லை என அரண்மனை ஆணையிட்ட பின்னர் அம்னோவின் ஜாம்ரி அப்துல் காதிர் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு இரண்டு நாள் முன்னதாக பக்காத்தானைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி பிஎன்-னுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினம் போலீஸ், தேர்தல் ஆணையம் ஆகியவற்ரின் துணையுடன் பிஎன் மக்களைக் கொள்ளையடித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்றும் நிஜார் சொன்னார்.
“பேராக் வரலாறு மக்களுக்குத் தெரிய வேண்டும். நடப்பு மாநில அரசாங்கம் அவர்களுடைய உரிமைகளைப் பறித்துக் கொண்டு விட்டது. அம்னோ அவர்களுடைய உரிமைகளையும் மதிக்கவில்லை. சட்டங்களையும் மதிக்கவில்லை,” என்றார் அவர்.