பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஜோகூரில் களம் இறங்குவார்

வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் ஜோகூரில் போட்டியிடுவார் என்ற வதந்திகளை அந்த மாநில பாஸ் கட்சி ஆனனயரும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் உறுதி செய்துள்ளனர்.

அது குறித்து விவாதம் நடந்துள்ளதை உறுதி செய்த முஸ்தாபா இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

அந்த விவரங்களை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது.

ஜோகூர் பொந்தியானைச் சேர்ந்தவரான சலாஹுடின், அம்னோ கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் நிறுத்தப்படுவார் என்ற வதந்திகளை அந்த மாநில பாஸ் ஆணையர் மாஹ்போட்ஸ் முகமட்டும் உறுதிப்படுத்தினார்.

ஜோகூரைச் சேர்ந்த சலாஹுடின் அந்த மாநிலத்தில் போட்டியிட வேண்டும் எனத் தாம் பரிந்துரை செய்ததாக மாஹ்போட்ஸ் சொன்னார். அந்த அம்னோ/பிஎன் கோட்டையைத் தகர்ப்பதற்கு பக்காத்தான் ராக்யாட்டுக்கு அது ஊக்கமளிக்கும் என அவர் நம்புகிறார்.

“சலாஹுடின் மட்டுமின்றி பாஸ் மத்தியக் குழு உறுப்பினரான மஸ்லான் அலிமானும் ஜோகூரில் போட்டியிடுவார்,” என அவர் சொன்னதாகவும் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சலாஹுடின் இரண்டு தவணைகளாக குபாங் கெரியான் எம்பி-யாக இருந்து வருகிறார். அவர் ஜோகூரில் போட்டியிடுவார் என்றும் பக்காத்தான் அந்த மாநிலத்தைக் கைப்பற்றினால் அடுத்த மந்திரி புசாராக அவரை அந்தக் கூட்டணி பெயர் குறிப்பிடும் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.

சலாஹுடின் தாம் போட்டியிடும் இடத்தை இந்த மாத இறுதியில்  அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சலாஹுடின் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிட விரும்பினால் அவரை எதிர்கொள்ள அம்னோ ஆயத்தமாக இருப்பதாக பொந்தியான் எம்பி-யுமான அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் சொன்னதாகவும் சினார் ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.