காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துமாறு அரசாங்கத்துக்கு பாஸ் இளைஞர் பிரிவு வேண்டுகோள்

காதலர் தினத்துக்கு எதிரான இயக்கத்தை தொடங்குமாறு  முஸ்லிம் இளைஞர் அமைப்பு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த காதலர் தினம் ஒழுக்கக் குறைவான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாக அது கூறிக் கொண்டது.

பிப்ரவரி 14ம் தேதி அந்த தினத்தை முஸ்லிம்கள் கொண்டாடாமல் தடுப்பதற்கு காதலர் தின எதிர்ப்பு விளம்பரங்களை அரசாங்கம் ஒலி, ஒளிபரப்ப வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் அப்து நிக் அஜிஸ் வலியுறுத்தினார்.

2005ம் ஆண்டு காதலர் தினக் கொண்டாட்டங்களை மலேசியாவில் இஸ்லாமிய அதிகாரிகள் தடை செய்தனர்.

அந்தக் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவ அம்சங்கள் இருப்பதாலும்  அந்தப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய சில நடத்தைகளினாலும் அந்தக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுவதாக அப்போது கூறப்பட்டது.

“ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தக் கொண்டாடுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் அரசு சாரா முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து முயன்று வருகிறோம்,” என்றும் நிக் அப்து கூறினார்.

மலேசியா சகிப்புத் தன்மை கொண்ட பல இன நாடு என்று பெருமையாகப் பேசப்படுகின்றது. என்றாலும் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினராக இருக்கும் முஸ்லிம்கள் மீது இஸ்லாமிய அதிகாரிகள் சில விதிமுறைகளை உருவாக்கி அமலாக்க முடியும்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தைக் கொண்டாடிய நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சமய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.