இந்தியர்கள் இன்னும் அதிகமாகப் பெற விரும்பினால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“இந்தியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலும் அரசு சாரா இந்திய அமைப்புக்களுக்கு அரசாங்கத்துக்கும் இடையிலும் பங்காளித்துவம் (partnership) தேவை,” என பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி கூடிய ஆயிரக்கணக்கான மலேசிய இந்தியர்களிடம் அவர் சொன்னார்.
“நமக்கு பங்காளித்துவம் இருந்தால் நாம் நிறையச் செய்ய முடியும். நமக்கு நம்பிக்கை வேண்டும்.” “நீங்கள் எனக்கு உதவுங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள். நான் உங்களை நம்புகிறேன்,” எனப் பிரதமர் சொன்ன போது பலத்தை கைதட்டல் எழுந்தது.
BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் பள்ளிப் பிள்ளைகளுக்கு 100 ரிங்கிட் உதவித் தொகையையும் மாணவர்களுக்கு 200 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டையும் தமது அரசாங்கம் வழங்கியுள்ளதையும் பிரதமர் கூட்டத்தினருக்கு நினைவுபடுத்தினார்.
இந்தியர்களுக்கும் பிஎன் வழி நடத்தும் அரசாங்கத்திற்கும் இடையில் நம்பிக்கையும் பங்காளித்துவமும் மேலோங்கினால் இந்தியர்களுக்கு இன்னும் அதிகமான நன்மைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
அதன் தொடக்கமாக பத்துமலை கோயில் வளாகத்தில் இந்திய பண்பாட்டு மய்யம் ஒன்ரையும் சமூக மண்டபத்தையும் கட்டுவதற்கான பணிகளை தொடக்குவதற்கான சிறப்பு ஒதுக்கீடாக 2 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்படுவதாகவும் நஜிப் அறிவித்தார்.
அந்தப் பண்பாட்டு மய்யத்தைக் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதற்காக பின்னர் இன்னும் பல ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பத்துமலை கோவில் வளாக அறங்காவலர் வாரியத் தலைவர் ஆர் நடராஜா முன் வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகளில் அந்த பண்பாட்டு மய்யமும் ஒன்றாகும்.
நான்கு அம்சக் கோரிக்கை
நஜிப்புக்கு முன்னதாகப் பேசிய நடராஜா முன் வைத்த நான்கு கோரிக்கைகள்:
பத்துமலையில் ஒர் இந்தியப் பண்பாட்டு மய்யம், மண்டபம்,
இந்து சமய விவகாரங்களுக்காக ஜி பழனிவேல் கீழ் சிறப்புப் பிரிவு,
அந்தப் பிரிவு இயங்குவதற்கு நிதிகள், மற்றும்
தீபாவளிக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை, இப்போது “ஏழை இந்தியர்களுக்கு” ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. சீனர்களுக்கு சீனப் புத்தாண்டுக்கும் மலாய்க்காரர்களுக்கு நோன்புப் பெருநாளுக்கும் ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உரையாற்றிய நஜிப், நடராஜாவின் மற்ற வேண்டுகோள் குறித்து எதுவும் சொல்லவில்லை. பிரதமர் பேசிய போது பொறுமை இழந்த சிலர் முணுமுணுக்கத் தொடங்கினர்.
உரைகளுக்கு முன்னதாக நஜிப்புக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டன. மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
அது போன்று பிரதமருடன் அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்த செனட்டர் கோ சூ கூன், மஇகா தலைவர் ஜி பழனிவேல், துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், எம்பி எஸ்கே தேவமணி ஆகிய பிஎன் தலைவர்களுக்கும் பொன்னாடையும் மலர் மாலையும் அணிவிக்கப்பட்டன.
மலேசியாவுக்கான இந்திய தூதரும் அந்த நிகழ்வில் காணப்பட்டார்.