அம்னோவுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி சொல்லுங்கள் என ஹுசாம், ஹசான் அலிக்கு அறிவுரை

சிலாங்கூர் மந்திரி புசாராவதற்கு தாம் கொண்டிருந்த ஆசையை ஹசான் அலி விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஸ் கட்சிக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியதற்காக சிலாங்கூர் பாஸ் ஆணையர், மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களிலிருந்து ஹசான் அண்மையில் நீக்கப்பட்டார்.

ஹசான், தமது விளக்கக் கூட்டங்களில் பாஸ் கட்சியை குறை கூறுவதற்குப் பதில் 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ தலைவர்களைத் தாம் சந்தித்ததற்கான காரணங்களையும் அதில் தமது பங்கு என்ன என்பதையும் வெளிப்படையாக கூற வேண்டும் என ஹுசாம் வலியுறுத்தினார்.

அந்தத் தேர்தலில் ஐந்து மாநிலங்களில் பக்காத்தான் ராக்யாட்  வெற்றி பெற்ற இரண்டு நாட்கள் கழித்து அதாவது மார்ச் 10ம் தேதி ஹசான் சிலாங்கூரில் உள்ள அம்னோ தலைவர்களைச் சந்தித்து பாஸ்-அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்தார் என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

“ஆனால் பாஸ் தலைவர்கள் அந்த யோசனையை முற்றாக நிராகரித்து விட்டனர். அதனால் நமது கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை,” என ஹுசாம் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

“2008ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் உதவி செய்வதற்காகத் தாம் கெடாவில் இருந்ததாக சாலோர் சட்டமன்ற உறுப்பினருமான ஹுசாம் சொன்னார்.

மார்ச் 10ம் தேதி அவர் பேராக்கில் இருந்தார். அங்கு ‘மக்கள் அரசாங்கத்தை’ அமைக்க உதவி செய்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பக்காத்தானிலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து பிஎன் அந்த மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.
 
“ஹசானுடைய திட்டம் பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காரணம் அவர் அன்றைய தினம் அம்னோ தலைவர்களுடன் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாஸ்-அம்னோ இணைப்பு அந்த கூட்டத்துக்கான விவாதப் பொருள் ஆகும்.” என்றார் ஹுசாம்.

“அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஹசான் சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பார்,” என அவர் மேலும் கூறினார்.

“நமது கொள்கைகள், பக்காத்தானுக்கான நமது கடப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாஸ் தலைவர்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்,” என கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டுக்கு தனிப்பட்ட உதவியாளருமான ஹுசாம் குறிப்பிட்டார்.

ஆனால் அம்னோவில் தாம் சேர விரும்பியதாகக் கூறப்படுவதை கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான ஹசான் மறுத்துள்ளார்.

முஸ்லிம்கள் ‘பரவலாக’ மதம் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிராக தாம் நடத்திய இயக்கம் காரணமாகவும் தமது தீவிரவாத இஸ்லாமியப் போக்கு காரணமாகவும் பாஸ் கட்சியிலிருந்து களையெடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்கும் ஆசை ஹசான் அலியை இன்னும் விடவில்லை எனக் கூறிய ஹுசாம், மாநில மந்திரி புசார் காலித் இப்ராஹிம் நிர்வாகத்தை அவர் அடிக்கடி குறை கூறி வருவதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

அந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையில் ஒற்றுமைப் பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்னரே ஹசான் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

“ஆனால் அவர் தமது போராட்டங்களில் உண்மையிலேயே பற்றுக் கொண்டிருந்தால் அம்னோவுடன் தாம் நடத்திய கூட்டங்கள் பற்றி வெளிப்படையாக விளக்க வேண்டும். அவர் அது குறித்து எப்போது வெளிப்படையாகப் பேசப் போகிறார் ?

ஹசானுடைய விளக்கக் கூட்டங்கள் பற்றியும் முஸ்லிம் சமூகத்தில் “கிறிஸ்துவ மயம் அதிகரித்து வருவது” குறித்து விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதற்காக ஹிம்புன் என்ற அரசு சாரா அமைப்பு நடத்தும் பேரணிகளில் ஹசான் பங்கு கொள்வது பற்றியும் கருத்துரைத்த ஹுசாம், தமது முன்னாள் தோழருக்கு சிறிய யோசனையையும் வழங்கினார்.

ஹசானுடைய போராட்டம் உண்மையிலேயே இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அவர் பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஹுசாம்  அறிவுரை கூறினார்.

முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்துவது ஹசானுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர் இப்போது செய்வதைப் போல முஸ்லிம்களை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது என்றும் ஹுசாம் சொன்னார்.

“அவருடைய எல்லா சொற்பொழிவுகளிலும் பாஸ் கட்சியைக் கண்டிக்கிறார். பாஸ் கட்சியத் தாக்கிப் பேசும் போது கட்சி அவருக்குச் செய்த நன்மைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

“கட்சி அவருக்கு செய்ததை நான் பட்டியிலிட வேண்டிய அவசியமில்லை… ஏனெனில் நிறைய நிறைய உள்ளன.”