ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் விற்கின்றன

மலேசியா, பாலஸ்தீன-ஆதரவு இயக்கத்தை நடத்திவரும்வேளையில் ஜோகூர் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு செம்பனை எண்ணெய் விற்பனை செய்வதாக இளைஞர் தரப்பு ஒன்று குறைகூறியுள்ளது.

சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) தலைவர் பத்ருல் ஹிஷாம் சஹாரின், ஜோகூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள், தஞ்சோங் பெலாபாஸ் மற்றும் பாசிர் கூடாங் வழியாக இஸ்ரேலுக்கு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்வதாக கூறினார்.

வலைப்பதிவர் ச்சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் பத்ருல், அந்த எண்ணெய் இஸ்ரேலின் மிகப் பெரிய துறைமுகமான அஷ்டோட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதை நிரூபிக்க சுங்கத்துறை ஆவணங்களை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் ஜோகூருக்கு வந்து செம்பனை எண்ணெய் ஏற்றுமதியைப் பார்வையிட்டார்; அதற்கு நிழற்படச் சான்று இருக்கிறது”, என்றாரவர்.

“இஸ்ரேலுடன் நமக்குத் தூதரக உறவுகள் இல்லையென்பதால் இது சட்டத்துப் புறம்பானது.”

அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகவும் அதற்கு உடனடி பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ச்சேகுபார்ட் கூறினார்.

இரண்டு வாரங்களுக்குள் பதில் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிட்டு மலேசிய அரசு அதன் மக்களை ஏமாற்றி வந்திருப்பதை அம்பலப்படுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

“பாலஸ்தீனியர்களுக்காக போராடும் வீரர்களாகக் காண்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்த ஆவணங்கள் மலேசிய அரசு, இஸ்ரேலுக்குத் துணை போவதையும் அதன் பொருளாதாரத்துக்கு உதவுவதையும் காண்பிக்கின்றன”, என்று இன்று கொம்டாரில் ச்சேகுபார்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாலஸ்தீனியர் நலனுக்காக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள்தான் பச்சைத் துரோகிகள் என்றாரவர்.

எஸ்ஏஎம்எம் இப்படிச் சாடியிருப்பது அன்வார் இப்ராகிமை இஸ்ரேலின் கையாள் என்று அம்னோ தாக்கியதற்குப் பதிலடி கொடுப்பதுபோல் உள்ளது.

அண்மையில், அன்வார் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கருத்துரைத்ததாக பன்னாட்டுச் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்த செய்தி முஸ்லிம் சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அம்னோ தலைவர்கள் அதற்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துக்கொண்டனர்.

ஆனால், அன்வார் அதை மறுத்தார். தம் கருத்தைத் திரித்துக் கூறிவிட்டனர் என்றாரவர்.