பெர்சே தேர்தல் சீர்திருத்தப் பேரணி தடுக்கப்படாமல் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் லண்டன் சாலைகளில் இப்போது நடக்கின்ற கலவரத்தைப் போன்று மாறியிருக்கும் என்று கூறியுள்ள துணை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் த்காலித் அபு பாக்காரை லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சாடியிருக்கிறார்.
“அந்த அறிக்கை அவரது அறியாமையைக் காட்டுகிறது,” என நுருல் இஸ்ஸா பெட்டாலிங் ஜெயா போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்கு வெளியில் நிருபர்களிடம் கூறினார்.
சாலை ஆர்ப்பாட்டங்களை தவிர்ப்பதின் மூலம் லண்டனிலும் மற்ற பிரிட்டிஷ் நகரங்களிலும் நிகழ்கின்ற கலவரங்களைப் போன்ற ‘பயங்கரக் கனவுகளை’ தடுக்க முயலும் என்பதற்கு தகுந்த ஆதாரம் என காலித் அபு பாக்கார் தமது பேஸ் புக் பக்கத்தில் நேற்று எழுதியிருந்தார்.
“இறைவன் கருணையால் பாசத்துக்குரிய நம் நாட்டில் அது போன்ற அச்சமூட்டும் துயரச் சம்பவங்களை நாம் தவிர்க்க முடிந்துள்ளது.”
“தெரு ஆர்ப்பாட்டங்களை நாம் எப்போதும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எப்படி மாறும் என்பது நமக்குத் தெரியாது. அமைதியை விரும்பும் மக்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று கூடுவதற்கான உரிமையை எப்போது பொது ஒழுங்குடன் சமநிலைப்படுத்திப் பார்க்க வேண்டும்,” என அவரது பேஸ் புக் செய்தி குறிப்பிட்டது.
முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து தாம் இது போன்ற அறிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நுருல் இஸ்ஸா, அடுத்த முறை “அவர் தமது வாயைத் திறப்பதற்கு முன்னர் உண்மைகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.
லண்டன் கலவரங்களுக்கு மூல காரணம் எதிர்ப்பு உணர்வாகும். பிரிட்டனில் அரசாங்க வரவு செலவுத் திட்டம் குறைக்கப்பட்டதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்ததும் அந்த எதிர்ப்பு உணர்வுக்கு வழி வகுத்து விட்டன என்பதை நுருல் இஸ்ஸா சுட்டிக் காட்டினார்.
அது, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெர்சே ஆதரவாளர்களிலிருந்து மாறுபட்டதாகும். பெர்சே ஆதரவாளர்கள் அத்துமீறி நடந்து கொள்வதை விரும்பாதவர்கள் என்றார் அவர்.
‘நாம் சீர்திருத்தத்தை அமலாக்காவிட்டால் எதிர்காலத்தில் கலவரங்கள் மூளக் கூடும்’
என்றாலும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வை விரிவுபடுத்தும் பொருளாதார முறையை சீர்படுத்த பிரிட்டனும் மலேசியாவும் தவறி விட்டதே இரு நாட்டு நிலவரங்களிலும் காணப்படுகிற ஒரே ஒரு ஒற்றுமை என அந்த லெம்பா பந்தாய் எம்பி சொன்னார்.
பிரிட்டன் அளவுக்கு மலேசியாவில் நிலைமை மோசமானதாக இல்லை என்றாலும் “நாம் சீர்திருத்தத்தை அமலாக்காவிட்டால் எதிர்காலம் அப்படித்தான் இருக்கும்” என அவர் எச்சரித்தார்.
போலீசார் ஜுலை 9 பெர்சே 2.0 பேரணியை சட்ட விரோதமானது என்றும் தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அந்த இயக்கத்தை சட்ட விரோதமானது என்றும் பிரகடனம் செய்தனர். அத்துடன் போலீசார் அந்தப் பேரணியை ஆதரிப்பதாக அல்லது பங்கு கொள்ள விரும்புவதாக சந்தேகிக்கப்படும் எவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தனர்.
தாங்கள் பொது ஒழுங்கை நிலை நிறுத்துவதாகவும் குழப்பத்தைத் தவிர்க்க அவ்வாறு செய்வதாகவும் போலீசார் கூறினர். ஆனால் அதனை அமைதியாக ஊர்வலத்தை நடத்தப் போவதாக வாக்குறுதி அளித்த பெர்சே ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
பேரணியின் போது சூறையாடப்பட்ட சம்பவங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதமோ பதிவு செய்யப்படவில்லை. போலீசார் பயன்படுத்திய கண்ணீர் புகைக் குண்டுகளினாலும் இரசாயனம் கலந்த நீரினாலுமே பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.