மசீச-டிஏபிக்கிடையில் இன்னொரு விவாதம்-நெகிரி செம்பிலானில்

நெகிரி செம்பிலான் மசீச தலைவர் டாக்டர் இயோ சாய் தியாம், அம்மாநில டிஏபி தலைவர் விடுத்துள்ள சவாலை ஏற்று பொதுவிவாதத்தில் கலந்துகொள்வார்.

ஆனால் ஒன்று, தலைப்பு உள்பட விவாதம் பற்றிய விவரங்களை மசீச-தான் முடிவு செய்யும். இதற்கு நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சீன நாளேடுகளில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, நேற்றுக் காலை நெகிரி செம்பிலான் டிஏபி பிரதிநிதிகள் மூவர், மாநில மசீச தலைமையகம் சென்று“ஜனநாயக அரசியலை வலுப்படுத்தவும் அரசியல் தலைவர்களுக்கிடையில் விவாதமிடும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையிலும்”  இயோ பொதுவிவாதத்துக்கு வரத் தயாரா என்று சவால்விடும் கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார்கள்.

பிற்பகலில், செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டிய இயோ (வலம்), டிஏபி-யின் சவாலை ஏற்பதாகக் கூறினார்.

“நெகிரி செம்பிலான் மசீச, சவாலை ஏற்கிறது. ஆனால் லொக், விவாதம் தொடர்பான விவரங்களை மசீச-வே முடிவு செய்யட்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி நடந்துகொள்ள வேண்டும்”, என்று இயோ தெரிவித்ததாக ஓரியெண்டல் டெய்லி அறிவித்துள்ளது.

தம் நிபந்தனைகளை ஏற்பதா இல்லையா என்பதை லொக் முடிவு செய்து நாளை நண்பகலுக்குள் பதிலைத் தெரிவிக்க வேண்டும். தவறினால், டிஏபி துணிச்சல் இல்லாத கட்சி என்பதைதான் அது காண்பிக்கும் என்று இயோ கூறினார்.

அரசியலில் இயோவும் லொக்கும் பரம வைரிகள். கடந்த பொதுத்தேர்தலில் ராசா நாடாளுமன்றத் தொகுதியில் இருவரும் போட்டியிட்டனர். அதில், டிஏபி இளைஞர் தலைவருமான லொக் 13,151 வாக்குகள் பெரும்பான்மையில் இயோவைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இயோ, பின்னர் ஒரு செனட்டராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனிடையே, ராசாவில் மறுபடியும் போட்டியிடுமாறு லொக், இயோவுக்குச் சவால் விடுத்துள்ளார்.ஆனால்,வேட்பாளரை பிஎன் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று இயோ கூறினார்.