தேர்தலில் பிஎன்னுக்கு நல்ல வெற்றி கிடைக்கலாம், பாக்’ லா ஆருடம்

2008 பொதுத்தேர்தலைவிட 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி.

அதற்கு பிஎன் தலைவர்களின் முயற்சிகளும் கடின உழைப்பும் தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“வேட்பாளர்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்”.அப்துல்லா, இன்று கோலாலம்பூரில், மெர்டேகாவுக்குப்பின் முஸ்லிம்களின் சாதனைகள் என்னும் கருத்தரங்கைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பொதுவிவாதத்துக்கு வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள சவால் பற்றி அப்துல்லாவிடம் கருத்துக் கேட்டதற்கு, “அது ஒன்றும் தேர்தலை முடிவு செய்யப்போவதில்லை”, என்றார். 

“விவாதம்  பிரச்னைகளைத் தீர்க்கப்போவதில்லை. அரசாங்கம் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் மேம்பாட்டுக்கு உதவியுள்ளதா என்பதுதான் முக்கியம்”, என்றாரவர்.

-பெர்னாமா