முக்ரிஸ்: இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகம் செய்வது தப்பில்லை

தனியார் நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்பதைத் துணை பன்னாட்டு வணிக, தொழில் அமைச்சர் முக்ரிஸ் மகாதிர் வலியுறுத்தியுள்ளார்.

வணிக நிமித்தம் இஸ்ரேலிய கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் வந்தணைவது தடுக்கப்படுவதில்லை ஆனால், இஸ்ரேலிய குடிமக்கள் தரை இறங்குவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றாரவர்.

இஸ்ரேலிய அரசுக்குச் சொந்தமான கப்பல்கள் கிள்ளானின் வெஸ்ட் போர்ட்டுக்கு தடையின்றி வந்துபோவதாக பிகேஆர் தொடர்புள்ள என்ஜிஓ, ஜிங்கா 13 கூறியுள்ளது குறித்து கருத்துரைத்தபோது முக்ரிஸ் இவ்வாறு கூறினார்.

மலேசியாவுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லை என்பதால் இதை ஒரு விவகாரமாக்க மாற்றரசுக் கட்சிகள் முயல்வதாக முக்ரிஸ் குறீப்பிட்டார்.

“தூதரக உறவு இல்லை  என்றால் இரு நாட்டு அரசுகளுக்குமிடையில் ஓட்டுறவு இல்லை என்று பொருள். இப்போது உள்ள வணிகம் இரு நாட்டு தனியார் துறைகளுக்கிடையில் நடப்பது. அதற்கு மலேசிய அரசு தடை விதிக்கவில்லை” , என்று முக்ரிஸ் தெரிவித்ததாக மலாய் நாளேடான சினார் ஹரியான் கூறியுள்ளது.

‘திசை திருப்பும் தந்திரம்’

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக பேசி அதன் விளைவாக பலதரப்பு கண்டனத்துக்கு இலக்கான பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதுள்ள கவனத்தைத் திசைதிருப்ப மாற்றரசுக் கட்சியினர் இந்த விவகாரத்தை  அடிக்கடி எழுப்பி வருகிறார்கள் என்று முக்ரிஸ் கூறினார்.

“பிஎன் அரசு இஸ்ரேலை இறையாண்மைபெற்ற நாடாக அங்கீகரிக்கவில்லை.ஆனால், அன்வார் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தற்காத்துப் பேசுகிறார்.அதாவது இஸ்ரேலை ஒரு நாடாக அவர் மதிக்கிறார் என்று பொருள்”.

வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு வழங்கிய நேர்காணலில் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தாம் ஆதரிப்பதாக அன்வார் கூறியிருந்தார்.

இது பற்றி இன்று பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீசைச் சந்தித்த அன்வார், இஸ்ரேல் தொடர்பில் தம் நிலைப்பாடு பாலஸ்தீன அரசியல் அமைப்புகளான ஹமாஸ், ஃபாத்தா ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்டதல்ல என்று விளக்கியுள்ளார்.