பெல்டா நீதிமன்ற தடை உத்தரவுக்குப் பின்னர் இஜிஎம்-மை ரத்துச் செய்தது

KPF என்ற Koperasi Permodalan Felda Malaysia Bhd நாளை நடத்தப்படவிருந்த தனது அவசரப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் FGVH என்னும் Felda Global Ventures Holdings Bhd-டை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் அது அவ்வாறு செய்துள்ளது.

பெல்டா ஹோல்டிங்ஸிலும்  Felda Global Ventures Holdings Bhd உட்பட அதன் 10 துணை நிறுவனங்களிலும் KPF கூட்டுறவுக் கழகத்துக்குள்ள 51 விழுக்காடு பங்குகளை மாற்றுவதற்கான யோசனை மீது அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் KPF-ன் வர்த்தகச் சொத்துக்கள் அனைத்தும் FGVHக்கு மாற்றி விடப்பட்டிருக்கும்.

அதற்கு ஈடாக FGVH புர்சா மலேசியா பங்குச் சந்தையில் மே மாதம் பட்டியலிடப்படும் போது அதில் 37 விழுக்காடு பங்குரிமையுடன் கூடிய சிறப்பு உரிமைகள் KPFக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

 பிப்ரவரி மாதம் 17ம் தேதி KPFன் ஐந்து உறுப்பினர்கள் தடை உத்தரவு கோரி குவாந்தான் உயர் நீதி மன்றத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டனர். அந்த தடை உத்தரவு நேற்று KPFக்கு வழங்கப்பட்டது.

இழப்பை எதிர்நோக்கும் FGVHக்கு KPF சொத்துக்களை மாற்றி விடும் போது சிறுதோட்டக்காரர்கள் ஏமாற்றப்பட்டு விடுவர் என அந்த ஐவரும் தங்கள் விண்ணப்பத்தில் கவலை தெரிவித்திருந்தனர்.

அந்த நீதிமன்ற உத்தரவை KPF வாரியம் பின்பற்றியது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அனாக் என்ற தேசிய பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள் சங்கத் தலைவர் மஸ்லான் அலிமான் கூறினார்.

KPFக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது தடை உத்தரவு இதுவாகும். கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்ட உத்தரவு முக்கியமான அவசரப் பொதுக் கூட்டத்தை ரத்துச் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது.

Felda Global Ventures Holdings பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடும் அரசாங்க முயற்சிகளுக்கு அந்தத் தடை உத்தரவு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அனாக் அடைந்துள்ள வெற்றியைத் தொடர்ந்து பெல்டா தலைவர் ஈசா சாமாட் ‘குழப்பத்தை உண்டாக்கியதற்காக’ பதவி விலக வேண்டும் என மஸ்லான் கோரினார்.

“அவர் அதனைச் செய்ய மறுத்தால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரை உடனடியாக நீக்க வேண்டும்,” என்றார் அவர்.

FGVH-ஐ பங்குப் பட்டியலில் சேர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மூளையே ஈசா என அவர் கூறிக் கொண்டார். அந்த முயற்சிகளின் விளைவாக  KPF கூட்டுறவுக் கழகம் நிலைகுலைய நேரிட்டது என்றும் மஸ்லான் குறிப்பிட்டார்.