ஐஎஸ்ஏ எதிர்ப்பாளர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

மூன்றாண்டுகளுக்குமுன்னர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட 16 பேர் குற்றவாளிகளே; அவர்கள் சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்தைச் செய்தவர்கள் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பின் வாதம் குற்றச்சாட்டின்மீது  சந்தேகங்களை எழுப்பவில்லை என்றும் நீதிபதி அய்னுல் ஷாரின் முகம்மட் தீர்ப்பளித்தார்.

16பேர்மீதும், 2009 ஆகஸ்ட் 3-இல், சட்டவிரோத பேரணியில் கலந்துகொண்டார்கள் என்று தண்டனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது.1967 போலீஸ் சட்டத்தின்கீழ் அவர்கள்மீது மாற்றுக்குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

அவர்கள், 2009 ஆகஸ்ட் முதல் நாள், கோலாலம்பூரில், மஸ்ஜித் நெகாரா, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வட்டாரத்தில் காலை மணி 9-க்கும் பிற்பகல் 1.30க்குமிடையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் ஒரு நாளில் அறிவிக்கப்படும் என்று அய்னுல் தெரிவித்தார்.