பாஸ் கட்சி “தடை செய்யப்பட்ட இஸ்ரேலிய நாட்டை” ஒரு போதும் அங்கீகரிக்காது என அதன் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார்.
முஸ்லிம் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு பாலஸ்தீன மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட பின்னர் தோற்றுவிக்கப்பட்டது இஸ்ரேல் என்பதைக் கருத்தில் கொள்ளும் போது அதுவே பொருத்தமான நிலை என அவர் சொன்னார்.
இஸ்ரேல் நிலைத்திருப்பதை ஏற்றுக் கொள்வதே தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலிய அதிகாரிகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பாலஸ்தீன மக்களை தொடர்ந்து சித்தரவதை செய்து கொன்று வருகின்றனர் என நிக் அஜீஸ் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
அந்த அறிக்கை www.pas.org.my என்னும் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“பாஸ் கட்சியின் அந்த நிலையை ஏற்றுக் கொள்வதை நாங்கள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் விட்டு விடுகிறோம்,” என்றார் அவர்.
பிகேஆர் கட்சியின் ஆலோசகருமான அன்வார் இப்ராஹிம், நிக் அஜீஸை நேற்று சந்தித்தார். அதற்கு பின்னர் நிக் அஜீஸின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார்,” இஸ்ரேல் மீதான தமது நிலை பாலஸ்தீன அரசியல் தரப்புக்களான ஹாமாஸ், பாத்தா ஆகியவற்றின் நிலைகளுக்கு ஏற்ப இருப்பதாக கூறினார்.
பெர்னாமா