பினாங்கு முதல்வரின் பேச்சு இன உணர்வுகளைத் தூண்டக்கூடியது என போலீஸ்புகார்

கடந்த சனிக்கிழமை, மசீச தலைவர் சுவா சொய் லெக்குடன் விவாதம் நடத்திய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார் என மசீச போலீசில் புகார் செய்துள்ளது.

சிலாங்கூர் மசீச பொதுப் புகார் பிரிவின் துணைத் தலைவர் எல்லன் லியு சின் கிம்(வலம்), பினாங்கு முதலமைச்சருக்கு எதிராக காஜாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்புகாரில், லிம் தம் பேச்சில் “பாஸ் சீனர்களைக் கொன்றதில்லை” என்று கூறியதாக லியு குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அப்படிச் சொன்னதன் பொருள் சீனர் சமூகத்துக்குப் புரியவில்லை என்றும் லிம் இன உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கிறாரோ என்று அது கவலை கொள்வதாகவும் லியு சொன்னார்.

அப்படிச் சொன்னதன் மூலமாக லிம் “இன விவகாரச் சட்டம் எதனையும்” மீறினாரா என்பதைப் போலீஸ் கன்டறிய வேண்டும் என்றும் லியு விரும்புகிறார்.

மூன்று நாள்களில் 10-க்கு மேற்பட்ட புகார்கள்

புகார் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லியு, லிம் தம் கூற்றின்மூலமாக இன உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கிறாரா என்பதை போலீஸ் ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

லிம்மின் பேச்சுக்கு எதிராக கடந்த மூன்று நாள்களில் பத்துக்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

லிம் தாம் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அப்படிப் பேசியதற்காக மலேசியர் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று லியு கூறினார்.

“பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில் இப்படி “பொறுப்பற்ற முறையிலும் அவமதிக்கும் வகையிலும்” லிம் பேசியிருக்கக்கூடாது என்றவர் சாடினார்.

“குண்டர்களும் தெருப் பொறுக்கிகளும்தான் இப்படிப் பேசுவார்கள்”, என்றாரவர்.