பாலோங் பெல்டா அம்னோ கோட்டையில் விரிசல் ஏற்படுகிறது

நெகிரி செம்பிலான் பெல்டா பாலோங் நிலக் குடியேற்றத் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக பிகேஆர் மேற்கொண்ட பிரச்சாரம் அரசியல் ரீதியில் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் அஸ்மின் அலி, மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் ஆகியோர் கலந்து கொள்ளும் செராமா கூட்டங்களுக்கு மக்கள் பெரும் எண்ணிக்கையில் வருவது அந்தக் கட்சிக்கு ஆதரவு கூடி வருவதைக் காட்டுகிறது.

பெல்டா குடியேற்றக்காரர்களின் போராட்டங்களுடனும் பிரச்னைகளுடனும் பிகேஆர் தன்னை இணைத்துக் கொண்டதின் மூலம் அந்தக் கட்சி அவர்களுடைய மனத்தை கவர்ந்துள்ளது. குடியேற்றக்காரர்களுடைய போராட்டங்கள் பெல்டாவுக்கு எதிராக அவர்கள் வழக்குப் போடுவதற்கு வழி வகுத்துள்ளது.

நேற்றிரவு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் பெல்டா பாலோங் 6ல் நூற்றுக்கணக்கான குடியேற்றக்காரகளிடம் உரையாற்றினார். பிஎன் கோட்டையெனக் கருதப்படும் அந்தத் திட்டத்தில் மொத்தம் உள்ள 16 பிரிவுகளில் அதுவும் ஒன்றாகும்.

பெல்டா பாலோங் 7லிம் 8லும் பிகேஆர் கிளைகள் அமைக்கப்படுவதையும் வான் அஜீஸா பார்வையிட்டார். அவற்றில் தலா 50 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

பெல்டா பாலோங் 5மன் பள்ளிவாசல் குழு உறுப்பினர்கள், அன்வார் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து ஜனவரி 9ம் தேதி விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் தொழுகையின் போது வான் அஜீஸாவுக்குக்  கனிவான வரவேற்பை வழங்கியது வியப்பளிக்கும் விஷயமாகும். காரணம் அந்த பள்ளிவாசல் குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் அம்னோ உறுப்பினர்கள் ஆவார்.

அந்தத் தொழுகைக்குப் பின்னர் பிகேஆர் தேநீர் விருந்தை வழங்கியது. பக்காத்தான் ராக்யாட் நிகழ்வுகளில் அது முதலாவதாகவும் அமைந்தது.

பிகேஆர் உறுப்பினர் எண்ணிக்கை கூடுகிறது

அன்வார் மீது நியாயமற்ற முறையில் அம்னோ இடைவிடாமல் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருவதை வான் அஜீஸா தமது உரையில் எடுத்துரைத்தார்.

“முறைகேடான பண நிர்வாகம், தேசிய விலங்குக் கூட நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ரிங்கிட்  ஊழல், ஸாக்காது நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்ற பல முக்கிய விஷயங்கள் மலேசியாவைச் சூழ்ந்துள்ளன.”

“என்றாலும் அம்னோ அன்றாடம் அன்வார் மீது அவதூறு கூறுவதிலேயே அக்கறை கொண்டுள்ளது. நாம் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்ற இயற்கை வளங்களை கொண்டுள்ள பணக்கார நாடு ஆகும்.”

“நாம் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் கல்வித் தகுதிகளையும் உயர்த்த வேண்டும்.”

பெல்டா பாலோங், பாலோங் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. அதனை இப்போது அம்னோவின் அஜிஸ் சம்சுதின் பிரதிநிதிக்கிறார்.

அந்தத் தொகுதி ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. அதன் உறுப்பினர் லிலா யாசின் என்ற உள்ளூர் அம்னோ தலைவர் ஆவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்வார் பெல்டா பாலோங் 10க்கு வருகை அளித்த போது அவரது உரையைச் செவிமடுக்க 70 பேர் மட்டும் வந்திருந்தனர். அவர்களில் ஏற்பாட்டுக் குழுவைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

கடந்த நவம்பர் மாதம் பெல்டா பாலோங் 6ல் நடைபெற்ற அன்வார் செராமாவுக்கு ஈராயிரம் பேர் வந்தனர். கூட்ட எண்ணிக்கையை தம்மால் நம்ப முடியவில்லை என அவர் தமது உரையில் இரண்டு முறை குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வில் பிகேஆர்-ல் இணைய 412 குடியேற்றக்காரர்கள் உறுப்பினர் விண்ணப்பப் பாரங்களைச் சமர்பித்தனர். பாலோங் சட்டமன்றத் தொகுதியில் அதிகமான பிகேஆர் உறுப்பினர் எண்ணிக்கையை பெல்டா பாலோங் 6 பெற்றுள்ளது.