அந்நிய நேரடி முதலீடுகள் கூடியதற்காக பினாங்கு Miti, Mida ஆகியவற்றுக்கு நன்றி கூறுகிறது

2011ம் ஆண்டு தயாரிப்புத் தொழில் துறை முதலீடுகளில் பினாங்கு முதல் இடத்தைப் பிடிப்பதற்கு உதவி செய்ததற்காக அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்-டுக்கும் Mida என்னும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்துக்கும் பினாங்கு மாநில அரசாங்கம் இன்று நன்றி தெரிவித்துக் கொண்டது.

“பினாங்கு தொழிலியல் மாநிலமாக மேம்பாடு காண்பதற்கு அடித்தளம் வகுத்த காலஞ்சென்ற டாக்டர் லிம் சொங் இயூ-வின் சீரிய முயற்சியை நாம் மறக்கக் கூடாது. அதனால் நடப்பு அரசாங்கம் அந்த வெற்றியைத் தொடர முடிந்தது,” என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த அறிக்கை கூறியது.

இயற்கை வளங்கள் ஏதுமில்லாத இந்த சிறிய மாநிலத்துக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கிடைத்துள்ள வெற்றி “எதிர்பாராத ஒன்று” என அவர் சொன்னார். அதற்கான முழுப் பாராட்டும் 1.6 மில்லியன் பினாங்கு மக்களையே சார வேண்டும் என்றார் அவர்.

பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை அறிவித்ததும் திறந்த டெண்டர் முறைகளும் “முதலீட்டாளர்களுடைய நம்பிக்கையை” அதிகரித்துள்ளன என்றும் லிம் குறிப்பிட்டார்.

“அந்த வரலாற்றுப்பூர்வமான வெற்றியில் ஒரு கூறாக இருப்பதில் பக்காத்தான் ராக்யாட் பினாங்கு அரசாங்கம் பெருமை கொள்கிறது. திறமை, பொறுப்பு, வெளிப்படை ஆகியவற்றின் அடிப்படையிலான ஆளுமையை அது தொடரும்,” என்றும் அவர் சொன்னார்.

2011ம் ஆண்டு தயாரிப்புத் தொழில் துறை முதலீடுகளில் 9.1 பில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் பினாங்கு முதலிடத்தை வகிப்பதாக நேற்று முஸ்தாப்பா அறிவித்தார். என்றாலும் மொத்த முதலீடுகள் அளவில் அந்த மாநிலம் 300 மில்லியன் ரிங்கிட் வேறுபாட்டில் சரவாக்கிற்கு அடுத்த நிலையில் உள்ளது.

பினாங்குடன் தயாரிப்புத் தொழில் துறை முதலீடுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள சிலாங்கூரும் அந்த வெற்றிக்கு முழுப் பாராட்டையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கடின உழைப்பும் அரசியல் நிலைத்தன்மையும், கூட்டரசு அரசாங்கம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குச் செய்துள்ள முதலீடுகளுமே அந்த வெற்றிக்குக் காரணங்கள் என்றார் அவர்.