அண்மையில் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா அமைப்பான ஜாத்தி (Jalur Tiga-Jati) யின் உண்மையான நோக்கங்கள் குறித்து கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாம், மலாய்க்காரர்கள், அரசர் அமைப்பு முறை ஆகியவற்றுக்குப் போராடுவதற்காக ஜாத்தி உண்மையில் அமைக்கப்பட்டிருந்தால் அது பாஸ் கட்சியுன் கை கோர்க்க வேண்டுமே தவிர அதனை எதிர்க்கக் கூடாது என அந்தக் கட்சியின் உதவித் தலைவருமான அவர் சொன்னார்.
“ஜாத்தி, பாஸ் கட்சியைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் அம்னோ கைப்பாவை,” என அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்படும் ஒர் இயக்கத்தை உலாமா (சமய அறிஞர்) ஒருவர் வழி நடத்த வேண்டும் என்றார் அவர்.
“ஹசான் உலாமா அல்ல. அவர் உலாமாக்கள் நிறைந்த பாஸ் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். உண்மையில் அவர் பாஸ் கட்சியில் உள்ள உலாமாக்களுக்கு எதிராக அவர் பேசுகிறார். அது தெள்ளத் தெளிவான முரண்பாடாகும்,” என ஹிசாம் விடுத்த அறிக்கை கூறியது.
இஸ்லாம் எந்த இனத்துக்கும் அப்பாற்பட்டது
இஸ்லாம் இன அடிப்படைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் வேளையில் அந்த இயக்கம் ஏன் மலாய்க்காரர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் ஜாத்தியைத் தொடக்கி வைத்து பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா ஆற்றிய உரை குறித்து கருத்துரைத்தார்.
மலேசியா போன்ற பல இன நாட்டுக்கு அந்த நோக்கம் பொருத்தமானது அல்ல என்றும் ஹுசாம் சொன்னார்.
“ஹாருஸ்ஸானி கவனமாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும். இஸ்லாம் இனத்துக்கு அப்பாற்பட்டது. அது ஒர் இனத்துக்கு மட்டும் உரியது அல்ல. மற்ற இனங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாம் விரும்பினால் நாம் அதனை மலாய்க்காரர்களுக்கு மட்டும் எனக் கட்டுப்படுத்தக் கூடாது,” என்றார் அவர்.
அத்தகைய அறிக்கை மலாய் சமூகத்தை மேம்படுத்த அம்னோ தவறி விட்டதற்குத் தக்க சான்று என்றும் ஹுசாம் குறிப்பிட்டார்.
“இஸ்லாத்துக்கு மேலாக இனவாத மலாய் போராட்டத்தை வைப்பது தவறாகும்.”
“இனத்துக்கு அப்பால் நீதி, ஒற்றுமை, சமநிலை, சமூக நலன் ஆகியவற்றுக்குப் போராடுவதே இஸ்லாமியப் போராட்டம் ஆகும். அந்த அடிப்படையில் தான் பாஸ், அம்னோவிலிருந்து வேறுபடுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.