அன்வார்: நிதி அமைச்சர் மட்டுமே GLCக்கு உத்தரவிட முடியும்

முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக தாங்கள் சமர்பித்துள்ள எல்லா வழக்குகளையும் மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் வெளியிட்டதாகக் கூறப்படுவது மீது அவரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறை கூறியிருக்கிறார்.

அது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சம்பந்தமாக இருந்தால் உத்தரவு நிதி அமைச்சிடமிருந்தோ அல்லது நிதி அமைச்சரிடமிருந்தோ வர வேண்டும். நஸ்ரியிடமிருந்து அல்ல என அன்வார் சொன்னார்.

“அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சம்பந்தப்படிருந்தால் அத்தகைய ஆணைகள் நிதி அமைச்சரிடமிருந்து வர வேண்டும்.”

“தாஜுடினுக்கு எதிராக பில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட வலுவான வழக்கு இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதனால் அந்தத் தகவல் கவலை அளிக்கிறது,” என முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

தாஜுடினுக்கு எதிரான எல்லா சிவில் வழக்குகளையும் தீர்த்துக் கொள்ள நிதி அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளதாக நஸ்ரி இம்மாதத் தொடக்கத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் டானாஹர்த்தாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மலேசியா இன்சைடர் தெரிவித்தது.

“தான் ஸ்ரீ டத்தோ தாஜுடின் ராம்லிக்கு எதிரான எல்லா வழக்குகளையும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள அரசாங்கமும் நிதி அமைச்சு ஒப்புக் கொண்டிருப்பதால் அவருக்கு எதிரான எல்லா சிவில் வழக்குகளும் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அந்தக் கடிதம் கூறியது.

“அந்த விவகாரம் மீது அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு அரசாங்கம் அதிகாரம் வழங்கியுள்ளது என்பதையும் இதன் மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.”

டெலிகோம் மலேசியா பெர்ஹாட், நாலுரி கார்ப்பரேஷன், செல்காம் (எம்) பெர்ஹாட், அட்லான் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், டானாஹர்த்தா, மலேசிய விமான நிறுவனம் போன்ற பல அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் எம் ஏ எஸ்ஸுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாஜுடின் மீது வழக்குப் போட்டுள்ளன.

இதனிடையே தாஜுடின் மீது வழக்குப் போட்டுள்ள தரப்புக்கள், அரசாங்கம், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவை நீதிமன்ற நடைமுறைகளுக்கு இணங்க உலக அளவிலான தீர்வைக் காண பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.