ஹிம்புனான் ஹிஜாவ்:குவாந்தானுக்கு வெளியில் 4பேரணிகள்

ஞாயிற்றுக்கிழமை குவாந்தானில் நடத்தப்படும்  லினாஸ்-எதிர்ப்பு Himpunan Hijau 2.0 -க்கு ஆதரவாக நாடு முழுக்க பல பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

“ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வு குவாந்தானில்தான் என்பதால் மக்களை அங்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதே வேளை குவாந்தான் செல்ல இயலாதவர்களும் இருப்பார்கள்.

“அதனால், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வுகள்   நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடைபெறும்”, என மலேசிய சோசலிசக் கட்சி (பார்டி சோசியலிஸ் மலேசியா) தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

ஆதரவு-பேரணிகள் நடைபெறும் இடங்களும் நேரமும்:

-கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள மாஜு ஜங்சன், காலை மணி 9.30-நண்பகல் வரை.

-பினாங்கு எஸ்பிலேனட், பேச்சாளர் மூலை, மாலை மணி 6.

பேரா, புக்கிட் மேராவில், முன்பு Asian Rare Earth தொழிற்சாலை அமைந்திருந்த இடத்துக்கு முன்புறம், காலை மணி 11.

-சாபா, கோத்தா கினாபாலு தஞ்சோங் ஆரு கடல்கரை,மாலை மணி 4.

வேறு எவரும் ஆதரவு-பேரணிகள் ஏற்பாடு செய்ய விரும்பினால் தாரளமாக செய்யலாம் என்றும் அருட்செல்வன் தெரிவித்தார்.

பேரணிக்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்ற ஹிம்புனான் ஜிஜாவ் 2.0 இயக்கக் குழு உறுப்பினர் கிளமெண்ட் சின்,அது பகாங் மக்களுக்குப் பெரும் ஊக்கம் தருவதாகக் குறிப்பிட்டார்.

“ஹிம்புனான் ஜிஜாவ், அனைவருக்கும் உரியது. சுற்றுசூழலில் அக்கறை கொண்ட, பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வாழ விரும்பும் குடிமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் அநீதிகள் குறித்து நம் கவலையை வெளிப்படுத்த ஒன்றுசேர வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.

லினாஸ் அரியமண் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர்,அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கக்கழிவுகளால் அருகில் வாழும் குடியிருப்பாளர்களின் உடல்நலனும் சுற்றுசூழலும் பாதிப்புறும் என்று அஞ்சுகிறார்கள்.