ஆர்சிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் அதன் அதிகாரங்கள் இன்னும் பரிசீலிக்கப்படுகின்றன

அடையாளக் கார்டு திட்டம் தொடர்பில் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது அண்மைய சபா பயணத்தின் போது அறிவிக்கவில்லை.

என்றாலும் அந்த ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை சபா மாநிலத்தைச் சேர்ந்த பிஎன் தலைவர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அந்த ஆணையம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள், அதன் உறுப்பினர்கள் பற்றி இன்னும் பரிசீலிக்கப்படுவதாக அப்கோ என்ற United Pasokmomogun Kadazandusun Murut Organisation அமைப்பின் தலைமைச் செயலாளர் வில்பிரட் மாடியூஸ் தங்காவ் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி அமைச்சரவை அந்த முடிவை எடுத்தது என்றும் அமைச்சரவை நிகழ்ச்சிக் குறிப்பில் அது இடம் பெற்றுள்ளது என்றும் அவர் சொன்னார். ஆகவே அந்த முடிவை நஜிப் அறிவிக்காதது குறித்து அவர் கவலைப்படவே இல்லை.

“பிப்ரவரி மாதம் 8ம் தேதி அமைச்சரவை அந்த முடிவை எடுத்தது. இன்று பிப்ரவரி 22ம் தேதி. நாம் இதற்காக நீண்ட காலம் போராடியிருக்கிறோம். ஆகவே அந்த அறிவிப்புக்காக இன்னும் ஒரிரு வாரங்கள் காத்திருப்பதில் என்ன தவறு ? அறிவிப்பு எப்போது விடுக்கப்படும் என்பது பிரச்னையே அல்ல.”

“அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி அமைச்சரவை ஏற்கனவே விவாதித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என முன்னாள் துவாரான் எம்பி-யுமான அவர் சொன்னார்.

சபா மக்கள் தொகை வெகு வேகமாக கூடியுள்ளது மிக முக்கியமான பிரச்னை என்பதைச் சுட்டிக் காட்டிய தங்காவ், விசாரிக்க வேண்டிய விஷயங்களை ஒரே கூட்டத்தில் முடிவு செய்ய முடியாது என்றார்.

விசாரிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிக் கூட்டரசு அரசாங்கம் சபா மாநில அரசுடனும் சபா மாநில பிஎன் உறுப்புக் கட்சிகளுடனும் விவாதிப்பதே பொருத்தமானது,” என்றார் அவர்.

சபா மாநிலத்தில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையைச் சமாளிப்பதற்கு சபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள்  மீதான சபா பிஎன் துணைக் குழு அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி இன்னும் கூட்டம் நடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த ஆணையத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அது விசாரிக்க வேண்டிய விஷயங்கள் இறுக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க தங்காவ் மறுத்து விட்டார்.

சில விவகாரங்களை இன்னும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது

சில விவகாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படுவதே மிக முக்கியமாகும்,” என அவர் வலியுறுத்தினார்.

ஆர்சிஐ விசாரிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் அதன் உறுப்பினர்கள் பற்றியும் அப்கோ ஏற்கனவே சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் தனது யோசனைகளை தெரிவித்துள்ளது.

அடையாளக் கார்டு திட்டம், அகதிகள் தகுதியைப் பெற்றுள்ள 84,000 பேர்களுடைய எதிர்காலம், வாக்காளர் பட்டியலிலிருந்து அடையாளக் கார்டு திட்டம் மூலம் நன்மை அடைந்தவர்களை நீக்குவது ஆகியவை உட்பட இதர பல விஷயங்களை ஆர்சிஐ விசாரிக்க வேண்டும் என அப்கோ விரும்புகிறது.

1990ம் ஆண்டுகளில் பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்காக அந்நியர்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கும் ரகசியத் திட்டமே,  அந்த அடையாளக் கார்டு திட்டம் என கூறப்பட்டது. முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அந்தத் திட்டத்தை அமலாக்குவதில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவதால் அது எம் திட்டம் என்று கூட அழைகப்பட்டது.