ரசாலி: ‘முதலில் மலாய்க்காரன்’ என்றுரைத்த தலைவர் 1மலேசியாவுடன் முரண்படுகிறார்

1மலேசியா அதிகாரப்பூர்வமான கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கும்போது ஒரு தலைவர் தான் “முதலில் மலாய்க்காரன் அப்புறம்தான் மலேசியன்” என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்வது அக்கொள்கையை மீறுவதாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி கூறுகிறார்.

அம்னோ உறுப்பினருமான தெங்கு ரசாலி, அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.ஆனால், அவர் துணைப்  பிரதமர் முகைதின் யாசினை மனத்தில் வைத்துதான் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.

1மலேசியா கோட்பாட்டின்படி ஒவ்வொரு மலேசியனும் முதலில் தன்னை ஒரு மலேசியனாகத்தான் கருத வேண்டும் என்றவர் கூறினார். 

“ஆனால், ஒரு தலைவர் தம் சொந்த கொள்கையையே மீறி  ‘நான் முதலில் மலாய்க்காரன், அப்புறம்தான் மலேசியன்’ என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

“அவர் அப்படிக் கூறியது 1மலேசியா கோட்பாட்டின்மேல் விழுந்த பலத்த அடி மட்டுமல்ல (முதல் பிரதமர்)துங்கு அப்துல் ரஹ்மான் அரும்பாடுபட்டு உருவாக்க முயன்ற ஜீவா மலேசியா உணர்வையும் சிதறடித்து விட்டது”, என்று தெங்கு ரசாலி குறிப்பிட்டார்.

தெங்கு ரசாலி இன்று காலை, பெட்டி ஷ்குபெர்ட் சென்.பெர்ஹாட்  ஏற்பாடு செய்திருந்த காலை பசியாறல் நிகழ்வில் கலந்துகொண்டு ‘வேண்டும் ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

என்இபி-இன் நோக்கம் மலாய் முதலீட்டாளர்களை உருவாக்குவதல்ல

குவா மூசாங் எம்பியுமான தெங்கு ரசாலி, புதிய பொருளாதாரக் கொள்கை பற்றியும் பேசினார்.

“அது முக்கியமாக வறுமையை ஒழிக்கவும் பொருளாதாரத்தில் மலாய்க்காரர் பங்கேற்பை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்டது..மலாய்க்காரர்கள் அல்லது பூமிபுத்ராக்களுக்கு மட்டுமல்ல எல்லா மலேசியர்களையும் கருத்தில்கொண்டே அது உருவாக்கப்பட்டது”, என்றாரவர்.

“முன்னாள் நிதி அமைச்சர் என்ற முறையில்,மலாய்க்காரரிடையே முதலீட்டாளர் வர்க்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கம் என்இபிக்கு இருந்ததில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்”.

ஆனால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் காலம் தொட்டு, பொருளாதாரத்தில் மலாய்க்காரர் பங்குரிமையை 30 விழுக்காடாக உயர்த்தும் முயற்சியில் ஒருசில மலாய் தொழில் முனைவர்களைத் தூக்கிவிடுவதற்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அவ்வாறு உயர்த்தி விடப்பட்டவர்களில் ரெனோங்கின் அப்துல் ஹாலிம் சாஆட்,மலேசிய விமான நிறுவனத்தின் தாஜுடின் ரம்பி போன்றோர் உள்ளிட்டிருந்தனர்.

அதன் விளைவாக வளம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்ததால் மலாய்க்காரர்கள் பொதுவில் 30விழுக்காட்டுப் பங்குரிமையை இன்னும் எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

மலாய்க்காரர்-அல்லாதார் எண்ணிக்கை குறைவு

அரசாங்கச் சேவையில் இருந்த மலாய்க்காரர்-அல்லாதார் எங்கு போனார்கள் என்றும் கூ லி என்று செல்லமாக அழைக்கப்படும் தெங்கு ரசாலி வினவினார்.

“1969-க்குப் பிறகு பெரும்பாலும் மலாய்க்காரர்களையே அரசாங்கச் சேவையில் சேர்க்கும் முயற்சி தலையெடுத்தது.

“அரசாங்கச் சேவை நாட்டின் இன அமைப்பைப் பிரதிபலிக்கவில்லை என்பது துயரமிக்கது. ஒரு இனம் மட்டுமே அதில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பது நாட்டில் துடிப்பான, திறமையான சிவில் நிர்வாகம் உருவாக உதவாது”.

பள்ளிகூடங்களும் முன்னர் இருந்ததுபோல் இப்போது இல்லை.

தேசியப் பள்ளிகள் மலாய்க்காரர்தன்மை பெற்று விளங்குவதால் மலாய்க்காரர்-அல்லாதார் அவர்களின் பிள்ளைகளைத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு அனுப்புவதையே விரும்புகிறார்கள்.

“கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்க ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் மலாய்க்காரர்-அல்லாதாருக்குத் தேசியப் பள்ளிகளின்பால் இருந்த நாட்டம் மேலும் குறைந்து போய்விட்டது.

“கல்விமுறையில் பாகுபாடு காட்டும் நடைமுறைகள் ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்விமுறை பின்பற்றப்பட்டால் நிலைமை மாறும்”.

தேசிய ஒற்றுமையும் நாம் புறக்கணிக்க முடியாத ஒன்று என தெங்கு ரசாலி குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது நாடாளுமன்றம் என்பதால் நாடாளுமன்றம் தேசிய ஒற்றுமை உருவாவதற்கு பெரும்பங்காற்றிட முடியும்.அதை உணர்ந்து, அதற்கேற்ப சரியான கொள்கைகளை வகுத்து ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதியான, வலுவான அரசாங்கம் தேவை.

நாடாளுமன்றம், தகுதியின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் நீதியான, நியாயமான கொள்கைகளை உருவாக்கினால் தேசிய ஒற்றுமையை உருவாக்கும் பயணத்தில் பாதித் தூரத்தைக் கடந்தவர்கள் ஆவோம்.

“அந்த வகையில்,நாட்டின் எதிர்காலத்துக்கான திறவுகோல் தங்கள் கைகளில் இருப்பதை வாக்காளர்களாகிய மக்கள் உணர வேண்டும்”, என்று தெங்கு ரசாலி கூறினார்.