மாற்று இடத்தில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணி நடத்த போலீஸ் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை ஹிம்புனான் ஹிஜாவ் 2.0 பேரணி, குவாந்தானில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் அல்லாமல் அதே சாலையில் உள்ள எம்பிகே4 திடலில் நடைபெறும்.

இன்று காலை பகாங் போலீசுடன் ஒரு மணி நேரம் வாதித்தபின்னர் இம்முடிவு செய்யப்பட்டதாக ஹிம்புனான் ஜிஜாவ் இயக்கக்குழு உறுப்பினர் கிளெமெண்ட் சின் கூறினார்.

“புதிதாகக் கொண்டுவரப்பட்ட பொதுப் பேரணிச் சட்டத்துக்கு ஏற்ப அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் போலீஸ் உடன்பட்டது”. என்றாரவர்.

புதிய இடம் “எம்பிகே1 திடலுக்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது” என்று சின் கூறினார்.கடந்த ஆண்டு மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு அத்திடல் பயன்படுத்தப்பட்டது. 

“முன்பு பலர், போலீஸ் நடவடிக்கையை எண்ணித் தயக்கம் கொண்டிருந்தார்கள்.ஆனால், இப்போது பெரும் கூட்டத்தை எதிர்பார்க்கிறோம்”, என்றவர் சொன்னார்.

“யாரும் காயமடைவதை நாங்கள் விரும்பவில்லை.பேரணியை அமைதியாக நடத்துவோம்.எல்லாரும் சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவோம்”.

குவாந்தான் நகராட்சி மன்ற(எம்பிகே)த்தின் செயல் ஏற்பாட்டாளர்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் சின் குறிப்பிட்டார்.

முதலில் எம்பிகே1 திடலில் பேரணி நடத்த அனுமதி கேட்டபோது போலீஸ் ஆதரவுக் கடிதமின்றி அனுமதி அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

நேற்று,  சுக்மா விளையாட்டுகளுக்காக திடலைத் தயார்ப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறித் திடலைச் சுற்றிலும் வேலி அமைக்கத் தொடங்கினார்கள்.

“சுக்மா ஜூன் மாதம்தான்.ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது திடலைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருக்கலாம்”, என்று சின் கூறினார்.

இந்த இரண்டாவது பேரணி-முதலாவது கடந்த செப்டம்பரில் நடந்தது-காலை மணி 9.30க்குத் தொடங்கி மூன்று மணி நேரத்துக்கு நடைபெறும்.அதே வேளை, கோலாலம்பூர் உள்பட மற்ற இடங்களிலும் ஆதரவுப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.