டாக்டர் மகாதீர்: எம்ஏஎஸ்-ஸை அரசாங்கம் மீட்டது மோசமானது அல்ல

எம்ஏஎஸ்-ஸை மீட்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால் பொது நிதிகள் இழக்கப்பட்டதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டுள்ளார்.

என்றாலும் தாம் விலகிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகளினால் அதை விட  மோசமான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் வாதாடினார்.

“ஈப்போவுக்கும் பாடாங் புசாருக்கும் இடையிலான இரட்டை தண்டாவளத் திட்டமும் மின்சார ரயில் திட்டமும் கைவிடப்பட்ட போது நமக்கு 8 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது,” என்றார் அவர்.

முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, 2003ம் ஆண்டு நாட்டின் அரசாங்கத் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சில மாதங்களில் அவற்றை ரத்து செய்தார்.

அந்தத் திட்டத்தைக் கைவிட்டதால் அவர் மகாதீருடைய கோபத்திற்கு இலக்கானார்.

இரட்டைத் தண்டாவளத் திட்டத்துக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் புத்துயிரூட்டப்பட்டது.

“அரசாங்க முடிவுகளில் காணப்படும் தவறுகள் குறித்து கவனம் செலுத்தும் போது ஊடகங்கள் தேர்வு செய்து செய்திகளை வெளியிடுவதாகத் தோன்றுகிறது,” எனக் கோலாலம்பூரில் இன்று பிற்பகல் இளைஞர் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மகாதீர் நிருபர்களிடம் கூறினார்.

2001ம் ஆண்டு எம்ஏஎஸ் பங்கு விலைகள் தலா 3 ரிங்கிட் 68 சென்னாக இருந்த வேளையில் அவற்றை 8 ரிங்கிட் கொடுத்து  அப்போதைய எம்ஏஎஸ் தலைவர் தஜுடின் ராம்லியிடமிருந்து வாங்குவதற்கு அரசாங்கம் 1.8 பில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்தது.