அம்னோ உறுப்பினர்: குழப்பத்துக்கு முன்னர் அன்வாருடைய கார் ஆர்ப்பாட்டக்காரரை மோதியது

கடந்த ஞாயிற்றுக் கிழமை செம்புரோங்கில் சூழ்நிலை கடுமையாவதற்கு முன்னர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடைய கார் எதிர்பாராத விதமாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை மோதியது.

அவ்வாறு செம்புரோங் பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வரிசையில்  நின்று கொண்டிருந்த அம்னோ இளைஞர் பிரிவு உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அந்த விபத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்வார் காரை உதைத்தனர். அதனால் கார் கதவு  ஒன்று சேதமடைந்தது. முன் கண்ணாடியும் உடைந்தது என அடையாளம் தெரிவிக்க விரும்பாத அவர் சொன்னார்.

“அது மெர்சிடிஸ். கஞ்சில் அல்ல. அந்தக் கார் தாக்கியது கடும் வலியை கொடுத்திருக்க வேண்டும்.”

“அது நிகழ்ந்த பின்னர் அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்கள் அன்வார் காரை உதைக்கத் தொடங்கினர். சம்பவத்தை நேரில் பார்க்காத மற்றவர்கள் தங்கள் நண்பர்கள் செய்ததைப் பார்த்ததும் அவர்களும் காரை உதைக்கத் தொடங்கினர்.”

தாம் இரவு மணி 8.00லிருந்து பின்னிரவு மணி 12.30 வரை அங்கு இருந்ததாக அவர் கூறிக் கொண்டார்.

போலீசார் கலவரத்தை ஒடுக்கினர். போலீஸார் தங்கள் கடமைகளைச் செய்யவில்லை எனக் கூறுவது உண்மையல்ல என்றார் அவர்.

“நாங்கள் முன்னேறுவதை தடுக்க அவர்கள் மனித வேலியை ஏற்படுத்தினர். அவர்கள் ஒருவரை இழுத்து சோதனை செய்தனர். ஆனால் அவரிடம் பட்டாசுகள் இல்லை,” என அன்வார் மீது பட்டாசுகள் வீசப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தார்.

உள்ளூர் அரசு சாரா அமைப்புக்களும் அம்னோ இளைஞர் பிரிவும் இணைந்து அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக அந்த 26 வயது குளுவாங் இளைஞர் கூறினார்.

அரசு சாரா அமைப்புக்களைச் சார்ந்த 80 பேரும் அம்னோ இளைஞர்கள் 20 பேரும் அங்கு இருந்தார்கள்.

பட்டாசுகளை எறிந்தது செம்புரோங் அம்னோ இளைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் யாருக்கும் காயத்தை விளைவிக்க எண்ணவில்லை. அன்வார் வருவதற்கு முன்னர் அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அதனால் அன்வார் பயந்து வரமாட்டார் என அவர்கள் கருதினர்.