லினாஸ் விவகாரத்தில் பாஸ் கட்சியின் நிலையிலிருந்து வேறுபட்டுள்ள அந்தக் கட்சியின் உலு லங்காட் எம்பி சே ரோஸ்லி சே மாட், பாகாங் கெபெங்கில் அமையும் அரிய மண் தொழில் கூடம் முறையான கண்காணிப்பு இருந்தால் பாதுகாப்பானது என்ற தனது நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நான் என் நிலையில் உறுதியாக இருக்கிறேன். நான் கல்வி அடிப்படையில் அந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன். அந்தத் தொழில் கூடம் அரிய மண்ணிலிருந்து பொருட்களை பிரிக்கிறது. அது அணு உலை அல்ல..”
“அது குரித்து சிந்திக்க வேண்டியது குவாந்தான் மக்களைப் பொறுத்ததாகும். கண்காணிப்பு இருந்தால் அது பாதுகாப்பானது,” என இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.
Himpunan Hijau 2.0 என்னும் பசுமைப் பேரணி பற்றிய விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது சே ரோஸ்லி அவ்வாறு கூறினார்.
பெர்லிஸில் குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால அவர் குவாந்தானில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லினாஸ் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்.
“சிலாங்கூர் பாஸ்-ஸைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அதனை ஆதரிக்கலாம். எந்தப் பிரச்னையும் இல்லை. உலு லங்காட் பாஸ் தொகுதியிலிருந்து கூட ஒரு குழு குவாந்தான் செல்கிறது,” என்றார் அவர்.
சே ரோஸ்லி ஒர் அணு விஞ்ஞானி ஆவார்.
குவாந்தான் எம்பி-யும் பிகேஆர் உதவித் தலைவருமான பூஸியா சாலே அந்த 700 மில்லியன் ரிங்கிட் திட்டத்தை தமது சொந்த நன்மைக்காக பொது மக்களைத் தவறாக வழி நடத்தி வருவது கண்டு தாம் “வெட்கப்படுவதாக” சே ரோஸ்லி கூறியதாக அரசாங்கச் சார்பு டிவி3 தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து அவரைக் கண்டித்த பூஸியா, அந்தத் திட்டத்தை ஆதரிக்க சே ரோஸ்லி முன் வைக்கும் வாதங்கள் மிகவும் சாதாரணமாக இருப்பதாக வருணித்தார்.
அணு விஞ்ஞானி என்னும் முறையில் தனிப்பட்ட ரீதியில் அந்த அறிக்கையைத் தாம் விடுத்ததாகவும் அந்த இஸ்லாமியக் கட்சியின் பேராளார் என்ற முறையில் அல்ல என்றும் சர்ச்சைக்குரிய அந்த திட்டத்துக்கு ஆதரவாகத் தாம் அதனைக் கூறவில்லை என்றும் சே ரோஸ்லி பின்னர் விளக்கினார்.