மனித வள அமைச்சு, இந்த நாட்டில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்த பட்சச் சம்பளத்தை அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்யும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
தற்போது உள்நாட்டுத் தொழிலாளர்களில் 900 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பளம் பெறுகின்ற 30 விழுக்காட்டினர் அதனால் நன்மை அடைவர் என அதன் அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட அந்த விகிதம் முதலாளிகளுக்குச் சுமையாக இல்லாது இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்துள்ளது என்றார் அவர்.
“நாங்கள் எல்லாவற்றையும் பரிசீலினை செய்துள்ளோம். அந்த விகிதம் நம் நாட்டுக்கு நன்மைகளைக் கொண்டு வரும். அது பொருளாதாரத்துக்கு ஊக்கமூட்டுவதுடன் அதிகமான வேலை வாய்ப்புக்களையும் உள்நாட்டு மக்களுக்கு உருவாக்கும். அதே வேளையில் அந்நியத் தொழிலாளர் எண்ணிக்கையையும் அது குறைக்கும்,” என்றார் அவர்.
டாக்டர் சுப்ரமணியம் இன்று சிரம்பானில் லாபு தேசிய வகைத் தமிழ் தொடக்கப் பள்ளிக் கூடத்துக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அடுத்த மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், புதிய குறைந்த பட்சச் சம்பளத்தை அறிவிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்கு முன்னர் அந்த நிகழ்வில் பேசிய டாக்டர் சுப்ரமணியம், புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தில் 12 வகுப்பறைகள் இருக்கும் என்றும் நிதி அமைச்சு வழங்கிய 1.9 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் அந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் சொன்னார்.
“இன்று தொடங்கிய அதன் கட்டுமானம் அடுத்த ஆண்டு மத்திக்குள் முழுமை பெற்று விடும்,” என அவர் தெரிவித்தார்.
பெர்னாமா