கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூரில் மதிப்பீட்டு வரிகள் உயர்த்தப்படவே இல்லை

பக்காத்தான் ராக்யாட் நிர்வாகத்தில் மதிப்பீட்டு வரிகள் அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மசீச பெலியவானிஸ் தலைவி ஜெஸி ஊய் கூறியுள்ளதை டிஏபி சாடியுள்ளது.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் மதிப்பீட்டு வரிகளை உயர்த்தியுள்ளதாக ஊய் கூறுவதை கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ்  வெங் சான் மறுத்தார்.

“உண்மையில் சில ஊராட்சி மன்றங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது மதிப்பீட்டு வரிகளை அதிகரிக்கவே இல்லை. எடுத்துக்காட்டுக்கு காஜாங் நகராட்சி மன்றம் 1985ம் ஆண்டிலிருந்து மதிப்பீட்டு வரியை கூட்டவே இல்லை,” என்றார் அவர்.

“என்றாலும் பெட்டாலிங் ஜெயா போன்ற சில ஊராட்சி மன்றங்கள் சிலாங்கூர் அரசாங்கத்துக்கு பிஎன் பொறுப்பாக இருந்த வேளையில் மக்கள் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களது மதிப்பீட்டு வரிகளை 8 விழுக்காடு முதல் 8.8 விழுக்காடு வரை ஏற்றியுள்ளன.”ளி

மதிப்பீட்டு வரிகளை உயர்த்தியதற்காக தாம் குறை கூறியது சிலாங்கூர் அரசாங்கத்தையே தவிர பினாங்கை அல்ல என ஊய் விளக்கமளித்த பின்னர் லாவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-உடன் விவாதம் நடத்திய போது லிம்-மை நோக்கி மிகவும் மூர்க்கத்தனமான தொனியில் கேள்வி எழுப்பிய பின்னர் ஊய் பொது மக்களுடைய கவனத்தைப் பெற்றார்.

“நான் ‘பாதி’ பினாங்குவாசி. மக்கள் சுமையைக் குறைப்பதாக நீங்கள் எப்போதும் பேசுகின்றீர்கள். ஆனால் மதிப்பீட்டு வரிகள் கூடியுள்ளன. எல்லா விலைகளும் ஏறி வருகின்றன,” என ஊய் கேள்வி எழுப்பினார்.

பினாங்கு மதிப்பீட்டு வரிகளை உயர்த்தி விட்டதாக கூறியது தவறு என இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊய் ஒப்புக் கொண்டார். சிலாங்கூரை குறி வைத்தே தாம் குறை கூறியதாக அவர் சொன்னார்.