பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் தனது தோழமைக் கட்சியான பிகேஆர் தோல்வி கண்ட இடங்களில் பாஸ் போட்டியிட விரும்புகிறது.
அடுத்த தேர்தலில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதிக்கும் பொருட்டு சில இடங்களைக் குரி வைத்துள்ளது என அதன் பினாங்கு ஆணையாளர் சாலே மான் தெரிவித்துள்ளார்.
பாஸ் தலைமைத்துவத்துக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
“நாங்கள் வெற்றி பெறும் சாத்தியமுள்ள தொகுதிகளை குறி வைத்துள்ளோம். அவை கடந்த காலத்தில் பிகேஆர் வெற்றி பெறத் தவறிய தொகுதிகளாகும்,” என சாலே மலேசியாகினியிடம் கூறினார்.
“அந்த இடங்களில் எங்களை நிரூபிப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.”
‘எத்தனை இடங்கள் என்பது குறித்து மௌனம்’
அவ்வாறு குறிக்கப்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களையும் மாநில பாஸ் தலைமைத்துவம் அடையாளம் கண்டுள்ளது. அந்தப் பட்டியல் அங்கீகாரத்துக்காக இப்போது கோலாலம்பூரில் இருக்கிறது என்று சாலே தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜுன் மாதத்தில் அல்லது அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் 13வது தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவிடமிருந்து வெளியாகும் என அவர் எண்ணுகிறார்.
பாஸ் எத்தனை இடங்களைக் குறி வைத்துள்ளது என்பதைத் தெரிவிக்க சாலே மறுத்து விட்டார்.
என்றாலும் அந்த எண்ணிக்கை முன்னைய தேர்தலை விட கூடுதலாக இருக்கும் என்றார் அவர்.
கடந்த தேர்தலில் பாஸ், பினாங்கில் ஐந்து மாநிலத் தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சாலே-யின் தொகுதியான பெர்மாத்தாங் பாசிர்-இல் மட்டுமே அது வென்றது. டிஏபி 19 இடங்களிலும் பிகேஆர் 16 இடங்களிலும் போட்டியிட்டன.
டிஏபி தலைமையிலான மாநில அரசாங்கத்தில் மலாய் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக குறை கூறப்படும் வேளையில் பாஸ் அதிகமான இடங்களுக்குக் குறிப்பாக பிகேஆர் தொகுதிகளை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போது துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான், பிகேஆர் பத்து மாவ்ங் உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம் ஆகியோர் மட்டுமே ஆட்சி மன்றத்தில் அங்கம் பெற்றுள்ளனர்.
பக்காத்தானுடைய பரம எதிரியான அம்னோ 11 சட்டமன்ற இடங்களை வைத்துள்ளது. அது மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
‘பாஸ் தான் இழந்த இடங்களில் கவனம் செலுத்த வேண்டும்’
மாநிலத்தில் மூத்த பாஸ் தலைவர் என்னும் முறையில் சாலே, கூடுதல் தொகுதிகளைக் கோருவது இயற்கையானது என பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி காசிம் கூறினார்.
என்றாலும் பிகேஆர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் மீண்டும் போட்டியிடும் என அவர் சொன்னார்.
தான் இழந்த இடங்களை குறிப்பாக மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறுவதில் பிகேஆர் கவனம் செலுத்தும் என்றும் ஜொஹாரி வலியுறுத்தினார்.
“பாஸ் 2008ல் ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஒன்றில் மட்டுமே வென்றது. அதற்கு வெற்றி பெற நான்கு இடங்கள் இருப்பது அதன் பொருள் ஆகும். ஆகவே அது ஏன் அந்தத் தொகுதிகளில் கவனம் செலுத்தக் கூடாது ?”