அரசாங்கக் கட்டிடங்களில் குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே போகாமல் வைத்திருக்க வேண்டும்

எல்லா அரசாங்கக் கட்டிடங்களும் தங்களது  குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பது விரைவில் கட்டாயமாக்கப்படும்.

எரிபொருள் செலவுகளைக் குறைப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம் என்று எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய் கூறினார்.

“நாம் தட்ப நிலையை ஒவ்வொரு டிகிரி குறைக்கும் போதும் கூடுதலாக நான்கு முதல் ஏழு விழுக்காடு எரிபொருள் பயனீடு அதிகமாவதாக அவர் சொன்னார்.

“எரிபொருளைத் திறமையாக பயன்படுத்தும் நோக்கம் கொண்ட நீண்ட கால அரசாங்கப் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நடவடிக்கை அமையும்.”

இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்கிய  பருவ நிலை மாற்றம், பசுமைத் தொழில் நுட்ப மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் சின் நிருபர்களிடம் பேசினார்.

புதிய நடவடிக்கை வழி அரசாங்கத்துக்கு எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பது குறித்த துல்லிதமான புள்ளிவிவரங்கள் இன்னும் தயாராகவில்லை எனக் கூறிய சின், ஒரு கட்டிடத்தின் அளவைப் பொறுத்து மொத்த எரிபொருள் செலவுகளில் 40 முதல் 60 விழுக்காடு, குளிரூட்டும் செலவுகளாக இருப்பதால் கணிசமான தொகையைச் சேமிக்க இயலும் எனக் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத் தலைமைச் செயலாளர் அனைத்து அமைச்சுக்களுக்கும் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதும் அந்த முடிவு, நடப்புக்கு வரும் என்றும் அமைச்சர் சொன்னார்.

அரசாங்கம் ஏன் குளிர்சாதக் கருவிகளுக்கான அளவை 34 டிகிரியாக நிர்ணயம் செய்தது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அது “அதிகக் குளிராகவும் அதிகச் சூடாகவும் இல்லாத நிலை” என்றார்.

பெண்கள் தங்கள் மேல் துண்டுகளை அலுவலகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் சின் தெரிவித்தார்.

என்றாலும் மருத்துவமனைகளில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகள் போன்ற குளிரான சூழ்நிலை தேவைப்படும் இடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.