பினாங்கு போலீசார் Himpunan Hijau பேரணி குழப்பம் மீதான விசாரணையை முடித்துக் கொண்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஜார்ஜ் டவுன் பாடாங் கோத்தா லாமாவில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியின் போது நிகழ்ந்த குழப்பம் மீதான புலனாய்வை பினாங்கு போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். அந்த புலனாய்வு தொடர்பில் போலீசார் 48 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்தக் குழப்பத்தில் இருவர் காயமடைந்தனர்.

மருட்டல் குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் 507வது பிரிவின் கீழ் இரண்டு புலானாய்வுக் கோப்புக்களை போலீஸ் திறந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார்.

அத்துடன் கலவரத்தில் ஈடுபட்டது, சட்ட விரோதமாகக் கூடியது ஆகியவற்றுக்காக குற்றவியல் சட்டத்தின் 143வது 147வது பிரிவின் கீழும் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

“அந்த இரண்டு கோப்புக்களும் மேல் நடவடிக்கைக்காக அரசு வழக்குரைஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று ஜார்ஜ் டவுனில் நிருபர்களிடம் கூறினார்.

போலீஸ் பொது மக்களிடமிருந்து 31 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த கூட்டம் மீதான 20 வீடியோ ஒளிப்பதிவுகளை போலீஸ் ஆய்வு செய்ததாகவும் அயூப் சொன்னார்.

சைனா பிரஸ் நாளேட்டின் பத்திரிகையாளர் 29 வயது அடாம் சியூ-வும் படப்பிடிப்பாளரான 25 வயது லீ ஹொங் சுன் -னும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.

பாகாங் கெபெங்கில் நிர்மாணிக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பெர்னாமா