இருபது மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பிஎன் மீது பழி போடப்பட்டது

2007ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விவசாய நிலம் ஒன்று விற்கப்பட்டதின் தொடர்பில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துக்கு (PKPS) ஏற்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு முந்திய பிஎன் அரசாங்கமே காரணம் என நடப்பு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சரவாக் மிரியில் 12,000 ஏக்கர் நிலம், ஒரு ஏக்கர் 8,802 ரிங்கிட்டுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளது.

“அந்த முடிவு (விற்பனை விலை) மிகவும் தவறானது. அந்த விவகாரத்தை தனிநபர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக நான் கருதுகிறேன்,” என விவசாயத் துறைக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் யாக்கோப் சபாரி இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

“மிகக் குறைந்த விலையில் அந்த நிலத்தை விற்றதற்காக பாரிசான்  நேசனல் மாநில அரசாங்கத்தை விவசாய அமைச்சர் நோ ஒமார் குறை சொல்ல வேண்டும்,” என்றார் அவர்.

அந்த விற்பனையைத் தடுப்பதற்கு நடப்புப் பக்காத்தான் அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் செய்தது எனக் குறிப்பிட்ட யாக்கோப், ஆனால் நீதிமன்றங்கள் அவற்றை நிராகரித்து விட்டன,” என்றார்.

“காரணம் முந்திய மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கிய PKPS அந்த நிலத்தை வாங்கியவருடன் விற்பனைப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ளது என நீதி மன்றம் கூறியது,” என்றார் யாக்கோப்.

அதற்கு நேர்மாறாக இப்போது PKPS-ன் புதிய நிர்வாகம் விவசாய நிலங்களை நிர்வாகம் செய்வதில் சீரான ஆதாயத்தைப் பெற்று வருவதாக அந்த ஆட்சி மன்ற உறுப்பினர் சொன்னார்.

செல்காட் எனப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படை மீதான தேர்வுக் குழு, நிதிகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் விசாரிக்கப்படும் , அரசாங்கத்துடன் தொடர்புடைய மூன்று நிறுவனங்களில் PKPS-ம் ஒன்றாகும்.

PKPS-ன் துணை நிறுவனங்களில் ஒன்றான PKPS Agro Industries Sdn Bhd (PAISB) ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தைக் கூடத்தை நல்ல முறையில் நிர்வாகம் செய்யவில்லை 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: