பிஆர்1எம் உதவி நிராகரிக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி குடும்பங்கள் தவிப்பு

பகாங்கில் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த பலர், அரசாங்கம் நிர்ணயித்த தகுதிகள் தங்களுக்கு இருந்தும் பிஆர்1எம் உதவி கிடைக்காததை எண்ணிக் குழப்பமடைந்துள்ளனர்.

சின்னி, கம்போங் பத்து கொங்கைச் சேர்ந்தவர் இஸ்மாயில் லே,43.

அவரும் அவரின் மனைவி பத்திமா பாசெமும் ரிம500 உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.ஆனால்,அவர்கள் அவ்வுதவிக்குத் தகுதிபெறவில்லை என்று கூறிக் கடிதம் ஒன்று வந்தது.

“நான் பால்வெட்டும் தொழிலாளி.என் மனைவி சில நேரங்களில் எனக்கு உதவி செய்வார்.மாதம் ரிம600 வருமானம் கிடைக்கிறது.”

அவர்களுக்கு 17,13,12,7,5 வயதுகளில் ஐந்து பிள்ளைகள். பள்ளிகளுக்கும் பாலர்பள்ளிகளுக்கும் செல்கிறார்கள்.

“ஏன் என்று தெரியவில்லையே….ஒரு வேளை பாரத்தைப் பூர்த்தி செய்ய நல்லா எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமோ”, என்றாரவர். 

ஆனால், இஸ்மாயிலின் தந்தைக்கு அந்த உதவி கிடைத்துள்ளது.

‘பத்துக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை’

அதே கம்பத்தில்-பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் தம் உறவினர் ஒருவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது என்று இஸ்மாயில் தெரிவித்தார்.

“என் கம்பத்தில் மொத்தம் 10 குடும்பங்களுக்கு அந்த உதவி கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்”, என்றாரவர்.

ஆனால்,பகாங், திரியாங்கில் ஒரு டத்தோவுக்கு அந்த உதவி கிடைத்துள்ளது.அவர் அதை வாங்கி அப்படியே தானம் செய்துவிட்டார்.