கீத்தா கட்சி கலைக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று யாரும் எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளார்.
அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கீத்தா சின்னத்தின் கீழ் தாம் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.
“பக்காத்தான் பிஎன் வேட்பாளார்களுக்கு அதிக அனுபவம் இல்லை. நான் அங்கு ஒரு மூத்த தலைவர். ஆகவே மற்ற இருவருடன் ஒப்பிடும் போது நான் சிறந்தவன் என நான் எனக் கருதுகிறேன்,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை கீத்தா கட்சி விரைவில் அறிவிக்கும் என்றும் ஜைட் சொன்னார்.
கெடாவிலும் பினாங்கிலும் உள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதால் கீத்தா கலைக்கப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்தார்.
“அவர்களை ஏற்றுக் கொண்டது தவறாகும். என்றாலும் நாங்கள் அவர்களை அகற்றி விட்டோம். இனிமேல் எந்தத் தவறும் இருக்காது,” சட்டத் துறைக்கு பொறுப்பான முன்னள் அமைச்சருமான ஜைட் சொன்னார்.
கெடா கீத்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஜமில் இப்ராஹிம், முன்னாள் பினாங்கு கீத்தா தலைவர் டான் தீ பெங் ஆகியோரை ஜைட் குறிப்பிடுகிறார் என்பது தெரிந்த விஷயமாகும்.