குழந்தை பராமரிப்பு மையங்களை அமையுங்கள் என ரோஸ்மா வேண்டுகோள்

தனியார் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் குழந்தை பராமரிப்பு மய்யங்களை அமைக்க வேண்டும் என பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் யோசனை கூறியிருக்கிறார்.

வேலை செய்யும் தாய்மார்கள், தங்கள் இளம் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களைச் சமாளிக்க அது உதவும் என்றார் அவர்.

“தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பராமரிப்பு மய்யங்களுக்கு அச்சமின்றி அனுப்பலாம். காரணம் அந்தப் பிள்ளைகள் அதே கட்டிடத்தில் இருப்பார்கள். அத்துடன் மதிய உணவு நேரத்திலும் பிள்ளைகளை அவர்கள் பார்க்க முடியும்.”

“அந்த நல்ல யோசனையை தனியார் துறை ஏற்க வேண்டும். அதனால் குழந்தைகள் தாய்ப்பாசத்தை இழக்க மட்டா. சமூகப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும்,” என ரோஸ்மா இன்று ஜோகூர் பாருவில் 2012ம் ஆண்டுக்கான பெர்மாத்தா கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

பாடத் திட்டம், கற்பித்தல் போன்றவற்றில் குழந்தை பராமரிப்பு மய்யங்களை அமைப்பதற்கு பெர்மாத்தா உதவத் தயாராக இருப்பதாகவும் பெர்மாத்தா புரவலருமான ரோஸ்மா கூறினார்.

வேடிக்கையுடன் கல்வி கற்பதற்கு வழி வகுக்கும் பெர்மாத்தா பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற குழந்தைகள் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

தனியார் மருத்துவமனைகள் பெர்மாத்தா பங்காளித்துவம்

மருத்துவமனை தத்து திட்டத்தின் கீழ் பெர்மாத்தா நெகாராவுடன் ஒத்துழைக்க சில தனியார் மருத்துவமனைகள் இணங்கியுள்ள தகவலையும் ரோஸ்மா அப்போது வெளியிட்டார்.

அந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுடைய சுகாதாரக் கவனிப்பில் மருத்துவமனைகள் சம்பந்தப்படும்.

கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனை, உலு சிலாங்கூர் பெர்மாத்தா மய்யத்தை தத்து எடுத்துக் கொண்டுள்ளது.

Johor Medical Group, Kajang Plaza Medical Centre, Columbia Asia Medical Centre, Sunway Medical Centre and Tun Hussein Onn National Eye Hospital ஆகியவை அந்தத் திட்டத்தில் இணைந்துள்ள மற்ற மருத்துவமனைகளாகும்

பெர்னாமா