PPSMI என்ற அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதை ரத்துச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் இயக்கம் விரைவில் இன்னொரு பேரணியை நடத்தவிருக்கிறது
அந்தப் பேரணி துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் தொகுதியான ஜோகூர் பாகோவில் நிகழும் என PPSMI எதிர்ப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஷாஹரிர் முகமட் ஜைன், ஹராக்கா டெய்லியிடம் கூறினார்.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அந்தப் பேரணி நிகழும் என்றும் PPSMIஐ உடனடியாக ரத்துச் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கத்தை நெருக்குவது அதன் நோக்கம் என்றும் ஷாஹரிர் சொன்னார்.
தொடக்கப்பள்ளிகளில் 2016ம் ஆண்டும் இடைநிலைப் பள்ளிகளில் 2013ம் ஆண்டும் PPSMIஐ ரத்துச் செய்ய அரசாங்கம் இப்போது எண்ணம் கொண்டுள்ளது.
“PPSMI ரத்துச் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அதற்குப் புத்துயிரூட்ட அண்மைய காலமாக சில குழுக்கள் முயலுவதாகத் தோன்றுகிறது,” என்றார் அவர்.
அந்த இயக்கம் நடத்திய பேரணியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் ஷாஹ்ரிர் பேசினார். சிலாங்கூரில் உள்ள கோம்பாக்கில் நேற்றிரவு அந்த நிகழ்வு நடைபெற்றது.
நேற்று PPSMIக்கு ஆதரவாக பெட்டாலிங் ஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற பேரணி பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்பது தெரிந்த விஷயமாகும்.
PPSMI ஆதரவுப் பேரணியை சிலாங்கூர் அக்கறையுள்ள பெற்றோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
PPSMI எதிர்ப்பு இயக்கம் தனது நோக்கங்களில் 60 விழுக்காட்டை மட்டுமே சாதித்துள்ளதாகவும் அதனால் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என்றும் ஷாஹ்ரிர் சொன்னார்.