தெங்கு அட்னான்: ஷாரிஸாட்டிடமிருந்து பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை

அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து விலகுவதாக ஷாரிஸாட் அப்துல் ஜலிலிடமிருந்து அம்னோவுக்கு பதவித் துறப்புக் கடிதம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் மறுத்துள்ளார்.

“இல்லை… எனக்குத் தெரிந்த வரை பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை. நான் திங்கட்கிழமை அவருடன் பேசினேன். ஆனால் அதன் விவரங்களை வெளியிட முடியாது,” என அவர் நிருபர்களிடம் கூறினார்

அதற்கு முன்னர் ஷாரிஸாட்டின் பதவித் துறப்புக் கடிதம் கிடைத்துள்ளதா என அவரிடம் வினவப்பட்டது.

புத்ரா ஜெயா எம்பி-யுமான தெங்கு அட்னான், இன்று 9 வது செக்சனில் புத்ரி அம்னோ ஏற்பாடு செய்த கேளிக்கை விழாவைத் தொடக்கி வைத்தார்.

நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்ட பின்னர் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிஸாட்டின் பதவி சர்ச்சைக்குள்ளானது.

அந்த நிறுவனத்தை ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் நிர்வாகம் செய்து வருகிறார்.

அமைச்சர், அம்னோ மகளிர் தலைவி ஆகிய பதவிகளின் ஷாரிஸாட்டின் நிலை குறித்துத் தாம் பொருத்தமான நேரத்தில் அறிக்கை விடுக்கப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்தார்.

பெர்னாமா