ஐ கேர் என்ற தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம் மீது சுகாதார அமைச்சு விரைவில் நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறது.
அந்தத் தகவலை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் தமது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த விஷயம் மீது தமது அமைச்சு அதிகாரிகளுடன் பொது மக்கள் கலந்துரையாடுவதற்கு விரைவில் வாய்ப்புக் கிடைக்கும் என்றார் அவர்.
“2020 இலட்சியத்தை நோக்கிச் செல்லும் போது நாட்டின் சுகாதாரக் கவனிப்பு எப்படி மேம்படுத்துவது என்பது மீது பொது மக்களுடனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடுவதே விளக்கக் கூட்டங்களின் நோக்கம்.”
அந்த விளக்கக் கூட்டங்களுக்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் லியாவ் குறிப்பிட்டார்.
“நாங்கள் இயன்ற அளவு அதிகமான மக்களைச் சந்திக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
அந்த ஐ கேர் திட்டம் இன்னொரு வரி விதிப்பு என்றும் நடப்பு சுகாதார கவனிப்பு முறை போதுமானது என்றும் அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைக் குறைக்கும் பொருட்டு சுகாதாரக் கவனிப்புக்காக மக்களிடமிருந்து வரி வசூலிக்க கூட்டரசு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி அது என்றும் அவர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.
அந்தத் திட்டம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்றும் திட்டமிடும் நிலையிலேயே இன்னும் இருப்பதாகவும் லியாவ் அடிக்கடி கூறி வந்துள்ளார்.