ஷாரிஸாட் அடுத்த மாதம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலில் வரும் ஏப்ரல் மாதம் தமது செனட்டர் பதவிக் காலம் முடிவுக்கு வந்த பின்னர் அமைச்சராக இருக்க மாட்டார்.

அந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவர் தாம் அம்னோ மகளிர் தலைவியாகவும் பிஎன் மகளிர் தலைவியாகவும் தொடர்ந்து இருக்கப் போவதாகச் சொன்னார்.

மேலவையில் அவரது உறுப்பினர் பதவிக் காலம் நிறைவுக்கு வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தாம் பதவித் துறப்புக் கடிதத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப் போவதாகவும் மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிஸாட் குறிப்பிட்டார்.

“நான் இது குறித்து நீண்ட காலமாக சிந்தித்து வந்துள்ளேன். நான் சரியானதைச் செய்ய விரும்புகிறேன். அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதுதான் அந்த முடிவு. அதற்கான நேரம் வந்து விட்டது”, என கோலாலம்பூர் தாமான் தேசாவில் தமது அமைச்சு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த நிருபர்கள் சந்திப்பில் ஷாரிஸாட் மிக அமைதியாகக் காணப்பட்டார். தமது கட்சிப் பதவிகளை தொடர்ந்து வைத்திருக்கப் போவதாக அவர் வலியுறுத்தினார்.

“நீண்ட நாட்கள் சிந்தித்த பின்னர் நான் அம்னோ மகளிர் தலைவியாகவும் பிஎன் மகளிர் தலைவியாகவும் தொடர முடிவு செய்துள்ளேன்.”

அம்னோ மகளிர் தலைவி பதவியையும் துறக்க ஷாரிஸாட் விரும்பியதாகவும் ஆனால் அம்னோ மகளிர் பிரிவினர் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அதன் தொடர்பில் பிரதமருக்கு விண்ணப்பித்துக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

“இந்த முடிவு என் சொந்த முடிவு என நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்,” என்றார் அவர்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழலுக்கு அவர் பலியானதாகக்  கூறலாமா என்றும் ஷரிஸாட்டிடம் வினவப்பட்டது.
 
அதற்குப் பதில் அளித்த அவர்,”நான் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்- என்எப்சி-யுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை,”என்றார்.

என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயிலை நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான் என்றும் அவர் மேலும் சொன்னார்.

“ஆனால் அரசாங்கத்தில் பொறுப்புள்ள உறுப்பினர் என்ற முறையில் கௌரவமாக விலகுவதுதான் சரியானது என நான் கருதுகிறேன்.”

அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது. “நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது”, என்றார் ஷாரிஸாட்.