நோ ஒமார் என்எப்சி சர்ச்சை குறித்து கருத்துரைப்பதைத் தவிர்த்தார்

நேற்றிரவு விவசாயம்,விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சுக்குச் சென்ற பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சர்ச்சை பற்றிய விளக்கத்தைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அமைச்சர் அமைச்சர் நோ ஒமார் அந்த விவகாரத்தைத் தொடாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அக்கூட்டத்தில் நோ, பிஎன் எம்பிகளின் தொகுதிகளுக்கான அமைச்சின் நிதிப் பங்கீடு பற்றி மட்டுமே விரிவாக பேசினார்.என்எப்சி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தார்.

“ஃபீட்லோட் பற்றி நிறைய கேள்விகள் இருக்கும்.ஆனால், அவற்றுக்குப்  பதிலளிக்க இது பொருத்தமான இடமல்ல.அது இப்போது (நீதிமன்றத்தில்)விசாரணையில் உள்ளது.”, என்றார்.

நேற்றுக் காலை என்எப்சி தலைவர் இஸ்மாயில் சாலே, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.அவர்மீது நம்பிக்கை மோசடி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும் 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

விவசாய அமைச்சின் 30-நிமிட நேரக் கூட்டத்துக்குப் பின்னர் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லனைச் சந்தித்தபோது அவர், என்எப்சி விவகாரம் பற்றி விளக்க வேண்டியது அந்நிறுவனம்தானே தவிர அமைச்சு அல்ல என்றார்.

“என்எப்சி விவகாரம் இப்போது நீதிமன்ற வழக்காக மாறியிருக்கிறது.குற்றச்சாட்டை மறுப்பதற்கோ, குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சான்றுகள் காண்பிக்கவோ அதுதான் பொருத்தமான தளமாகும்.ஊடகங்களில் அதைக் கேளிக்கைச் சந்தையாக்கக்கூடாது”, என்றாரவர்.

பொதுக் கணக்குக் குழுவின் ஓர் உறுப்பினருமான அப்துல் ரஹ்மான், என்எப்சி விவகாரம் நீதிமன்றம் சென்றிருப்பதால் அதைத் தொடர்ந்து விசாரிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அக்குழு இன்று கூடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

TAGS: