சட்டத்துறைத் தலைவர்(ஏஜி)அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று பேரரசரிடம் பிரதமர் கோரிக்கை விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அவசரத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதைப் பதிவுசெய்த சுபாங் எம்பி ஆர்.சிவராசா (பிகேஆர்), அதிகாரம் மிக்க அவ்விருவரும் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனை விசாரணை செய்துவந்த அதிகாரிகள்மீது பொய்வழக்கு ஜோடித்து அதிகார அத்துமீறல் புரிந்திருப்பது ஒரு“கடுமையான விவகாரம்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
2006-இல், அப்போதைய உள்துறை துணை அமைச்சர் ஜொஹாரி பஹாரோம், வணிகக் குற்றப்புலன் விசாரணைத் துறைத்(சிசிஐடி) தலைவர் ரம்லி யூசுப்புக்கு ஜோகூரின் ரகசியக் கும்பல் தலைவன் கோ செங் போ பற்றி விசாரணை செய்யுமாறு பணித்தார் என்ற தகவலை
மலேசியாகினி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தது.
ரம்லியின் விசாரணையில், கோ-வின் சூதாட்ட, பணச்சலவை நடவடிக்கைகளை மூடிமறைக்க மூசா(வலம்) உதவியாக இருந்தார் என்பது தெரிய வந்தது.
கனி, சிசிஐடி-இடம் உள்ள ரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புகளைப் பெறுமாறும் கோ பற்றித் தகவல் தெரிவித்தவர்களைக் கண்டுபிடித்து மிரட்டி,சிசிஐடி அதிகாரிகளைக் குற்றவாளிகளாக்கும் வகையில் அவர்களின் வாக்குமூலங்களை மாற்றுமாறும் ஊழல் எதிர்ப்பு வாரியத்துக்கு(ஏசிஏ) உத்தரவு பிறப்பித்தார் என்று கூறப்பட்டது.
“கனி மீது கூறப்பட்டவை நிரூபிக்கப்பட்டால்,அவர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து பொய்யான வாக்குமூலங்கள் தயாரித்தது உள்பட பல குற்றங்களைச் செய்தவராவார்”, என்று சிவராசா குறிப்பிட்டார்.
“இந்தக் கட்டத்தில் அக்கூற்றுகள் உண்மையானவையா பொய்யானவையா என்பதைக் கூற இயலாது.ஆனால்,அவ்வாறு கூறப்படுவதற்கு ஆதரவாக நம்பத்தக்க சான்றுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை”, என்றாரவர்.
இதனிடையே அமைதிப் பேரணி சட்டம் பேரரசரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக அரசு இதழிலும் வெளியிடப்பட்டு விட்டது.
அச்சட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள்,சமூக அமைப்புகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட கடந்த நவம்பரில் மேலவையில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டம் தெரு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்கிறது.அது, அச்சட்டம் பற்றி முன்வைக்கப்பட்ட முக்கியமான குறைகூறல்களில் ஒன்று.