அவைத்தலைவர்: என்எப்சி மீது விவாதம் தேவையில்லை

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி) விவகாரம் பற்றி  விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசர தீர்மானம் ஒன்றை நிராகரித்தார்.அவ்விவகாரம்  நீதிமன்ற விசாரணையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜுரைடா கமருடின்(பிகேஆர்-அம்பாங்), என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிருப்பது தமக்குத் தெரியும் என்றார்.

“ஆனால், என்னுடைய தீர்மானம் சாலே சம்பந்தப்பட்டது அல்ல.அவ்விவகாரத்தில் விவசாய அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி”, என்று ஜுரைடா கூறினார்.

நேற்று முகம்மட் சாலே(வலம்),64,மீது 2009 டிசம்பர் 1-இலும் டிசம்பர் 4-இலும் நேசனல் மீட் அண்ட் லைப்ஸ்டோக் கார்ப்பரேசனுக்காக(என்எம்எல்சி), என்எப்சி பணத்தில் ரிம9,758,140-க்கு பங்சார் ஒன் மெனுருங் வளாகத்தில் இரண்டு ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கியதன்வழி நம்பிக்கை மோசடிக் குற்றம் புரிந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.

2009 மே 6-க்கும் நவம்பர் 16-க்குமிடையில் என்எப்சி நிதியிலிருந்து ரிம40மில்லியனை என்எம்எல்சி-க்கு மாற்றி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவை தவிர,என்எப்சி ஆண்டுக்கூட்டத்தின் ஒப்புதல் இன்றி அவர் நிதியைப் பயன்படுத்தியதன்வழி 1965ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறி இருக்கிறார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

TAGS: