நிச்சயதார்த்த விருந்துக்குப் பிரதமர் பணம் கொடுத்தார்:ஹோட்டல் விளக்கம்

ஷங்ரிலா ஹோட்டல் கோலாலம்பூர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் அவரின் மகள் நிச்சயதார்த்த விருந்துக்குப் பணம் கொடுத்தார் என்றும் அரசாங்கம் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.

“அந்நிகழ்வு ஜூன் 17-இல் நடந்தது.அதற்கான பணத்தை ஜூன் 30-இல் மாண்புமிகு பிரதமர்தான்  முழுமையாக செலுத்தினார்.பிரதமர் அலுவலகம் அதைச் செலுத்தவில்லை”, என்று அது ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டது. 

பிரதமரின் அலுவலகம், விருந்துக்கான 409,767 ரிங்கிட்டைக் கொடுத்ததாகக் கூறப்பட்டதை ஏற்கனவே மறுத்துள்ளது.

‘ஆதாரம் காட்டுங்கள்,அறிக்கை வேண்டாம்’

இன்று காலை, பிகேஆர்-தொடர்புள்ள என்ஜிஓ ஜிங்கா 13,பிரதமர்தான் விருந்துக்குப் பணம் கொடுத்தாரா என்பதைக் கண்டறிய அந்த ஹோட்டலுக்குச் சென்றது.

தாங்கள் கொடுத்த மகஜரை அதன் உணவு, பானங்கள் பிரிவு உதவி இயக்குனர் சுல்கிப்ளி ஜாபார் பெற்றுக்கொண்டார் என ஜிங்கா 13 தலைமை ஒருங்கிணைப்பாளர் ஃபாரிஸ் மூசா கூறினார்.

“எங்களுக்கு அறிக்கை எல்லாம் வேண்டாம் என்பதை அவர்களிடம் தெரிவித்தோம்.விருந்துக்கான தொகையைப் பிரதமர்தான் கொடுத்தார் என்பதற்கு ஹோட்டல் ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்றோம்”.

நஜிப்தான் விருந்துக்கான பணத்தைக் கொடுத்தார் என்றால் விருந்துக்கான கிட்டத்தட்ட அரை மில்லியன் ரிங்கிட்டை எப்படிக் கொடுக்க முடிந்தது என்பதை அவர் விளக்கியாக வேண்டும் என்று ஃபாரிஸ் கூறினார்.

அந்த என்ஜிஓ இதன் தொடர்பில் நேற்று மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தில் புகார் ஒன்றைச் செய்துள்ளது.