குப்பைக்கொட்டுமிடங்களில் அரசியாரை வரவேற்கும் பதாகைகளைக் கண்டு எம்பிபிபி எரிச்சல்

பேரரசியார் துவாங்கு ஹமினா ஹமிடுன் நாளை,  தங்கக் கட்டிகளையும் நாணயங்களையும் வாங்கி விற்கும் நிறுவனமான பப்ளிக் கோல்ட் இண்டர்நேசனல் பெர்ஹாட்(பிஜிஐபி)டின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

அதற்காக பினாங்கில் பல இடங்களில் பேரரசியாருக்கு வரவேற்பு கூறும் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால், பதாகைகளில் சில “பொருத்தமற்ற”  இடங்களில் காணப்படுவது பினாங்கு முனிசிபல்  மன்ற(எம்பிபிபி)த்துக்கு எரிச்சலூட்டியுள்ளது.

பதாகைகள்,  குப்பைக் கொட்டுமிடங்களுக்கு அருகிலும்  ஒழுங்கற்ற முறையிலும் காணப்படுவதாக சிலர் மன்றத்திடம் புகார் செய்திருக்கிறார்கள் என்று எம்பிபிபி கவுன்சிலர் ஒங் ஆ தியோங் கூறினார்.

“நாங்கள் அரசியாரை அவமதிப்பதாக சிலர் புகார் செய்தார்கள்”,என்று பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

“அது மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது தனியார் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்வு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்”, என்றாரவர்.

நாளை விஸ்மா பப்ளிக் கோல்ட்-இல் நடைபெறும் அந்நிகழ்வுக்காக  எம்பிபிபி  400 பதாகைகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

இப்போது மேலும் 800 பதாகைகளுக்கு அந்நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு மன்றம் இசைவு தெரிவித்து விட்டதாக ஒங் தெரிவித்தார்.

ஆனால், பதாகைகள் முறையாக தொங்கவிடப்படவில்லை.மாநிலச் செயலகம் அங்கீகரிக்காத இடங்களில் எல்லாம் அவை கட்டப்பட்டுள்ளன.

“அதை ஏற்பாட்டாளர்களிடம் சுட்டிக்காட்டியபோது, மன்றத்திடமே அவற்றைச்  சரிசெய்யும்படி கூறினார்கள். அதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.”

பேரரசியாரிடம் மன்னிப்பு கேளுங்கள்’

ஏற்பாட்டாளர்கள் அரசியாரை “அவமதித்ததற்காக” அரசியாரிடமும் இந்தக் குளறுபடியில் மாநில அரசை இழுத்துவிட்டதற்காக மாநில அரசிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓங் விரும்புகிறார்.

பப்ளிக் கோல்ட் நிறுவனர் லூயிஸ் இங்-கைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது பதாகைகள்“அவசரம் அவசரமாக” க் கட்டப்பட்டதால் நேர்ந்த தவறு என்றார்.

அப்பொறுப்பு ஒரு குத்தகையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிறைய பதாகைகளைக் கட்ட வேண்டியிருந்ததால் அவர் மற்றவர்களுடன் உள் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களிடம் வேலையை ஒப்படைத்திருக்கிறார்.

“அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை.குத்தகையாளர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.

1,200 பதாகைகளுக்கு அனுமதி அளித்த எம்பிபிபி-யையும் அவர் பாராட்டினார். 

மேலும், 2,000பதாகைகளுக்கு அனுமதி கேட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.