பினாங்கில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் மூத்த போராளி ஒருவரை ‘முதியவர்’ என வருணித்த முதலமைச்சர் லிம் குவான் எங்-கை அந்த மாநில மகளிர் பிரிவுத் தலைவி தான் செங் லியாங் சாடியுள்ளார்.
மாநில அரசாங்கம் பொது மக்களுடன் கலந்தலோசனை நடத்தும் பழக்கத்தைப் பின்பற்றவில்லை என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவரான எஸ் எம் முகமட் இட்ரிஸ் கூறியதற்காக அவரை “முதியவர்” என லிம் வருணித்தார்.
முகமட் இட்ரிஸை தற்காத்துப் பேசிய தான், அந்த என்ஜிஒ-வின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் லிம் மறுத்து விட்டதாகவும் குறை கூறினார்.
“அது அவருடைய (லிம்) அகங்காரத்தையும் பிடிவாதத்தையும் காட்டுகிறது,” என முன்னாள் ஜாவி சட்டமன்ற உறுப்பினருமான அவர் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பினாங்கிற்காக அறிவிக்கப்பட்ட பல பெரிய சாலை கட்டுமானத் திட்டங்கள் மீது பொது மக்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்பதை அண்மையில் முகமட் இட்ரிஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்த டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், முகமட் இட்ரிஸ் “தவறு செய்துள்ளது” இது முதன் முறை அல்ல எனக் குறிப்பிட்டார்.
தெலுக் பாகாங்கில் அரசாங்கத் தகவல் ஏட்டில் காடுகள் என அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீம் பார்க் ( theme park ) ஒன்றை கட்டுவதாக ஏற்கனவே முகமட் இட்ரிஸ் குறை கூறியிருந்தார் என அவர் மேலும் சொன்னார்.
“அது உண்மை இல்லாத கூற்று ஆகும் அதற்காக பின்னர் முகமட் இட்ரிஸ் பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதை நான் வெளியிடவே இல்லை. காரணம் அவர் வயதானவர், மரியாதைக்குரிய பிரமுகர். ஆகவே அந்த விவகாரத்தை ஆறப் போட்டு விட்டுவோம்,” என அப்போது லிம் நிருபர்களிடம் கூறினார்.