கனி,மூசாவுக்கு எதிராக சாட்சியமளிக்க மாட் ஜைன் தயார்

சட்டத்துறைத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் ஆகியோரின் தவறான நடத்தைகளை விசாரிக்க நடுவர் மன்றம்  அமைக்க வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது.

இப்போது இன்னொரு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி மாட் ஜைன் இப்ராகிம், ஐஜிபி இஸ்மாயில் ஒமாருக்கு எழுதியுள்ள திறந்த மடலில், அப்படி ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று கூறீயுள்ளார். அக்கடிதத்தின் பிரதியை அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

“அதை (நடுவர் மன்றம்)அமைக்கப் போதுமான காரணங்கள்  உண்டு.மற்றவர்களின் குற்றச்செயல்களைத் தொடர்ந்து புறக்கணிக்க அல்லது மூடிமறைக்க முயன்றால் பிரதமர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்”, என்றும் மாட் ஜைன் எச்சரித்தார்.

மாட் ஜைன், அன்வார் இப்ராகிமின் கண் காயமடைந்த விவகாரத்தில் மூசா, கனி ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளது பற்றி சாட்சியமளிக்க விரும்புகிறார்.

மூசா, முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்.கனி, அவ்வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக இருந்தார்.மாட் ஜைன் கண்-காயம் சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரியாக இருந்தார்.

கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலன் விசாரணைத் துறை(சிஐடி) முன்னாள் தலைவரான மாட் ஜைன், கனியையும் மூசாவையும் விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இரண்டாவது முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஆவார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வணிகக் குற்றப்புலன் விசாரணைத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப்பும் கனி, மூசாவை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அவர்களுக்கு எதிரான  மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.

மாற்றுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் 2008, ஜூலை 1-இல் செய்துள்ள புகார் ஒன்றில், சாட்சியங்களை ஜோடித்தார்கள் என்று மூசா,கனி, டாக்டர் அப்துல் ரஹ்மான்  யூசுப் ஆகியோருடன் தம் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பதால் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க விரும்புகிறார் மாட் ஜைன்.அதற்கு நடுவர் மன்றம் உதவும் என்று நம்புகிறார்.

அப்புகாரை விசாரிக்க ஊழல்-எதிர்ப்பு வாரியம்(ஏசிஏ) ஒரு தனிக்குழுவை அமைத்தது.அது,சாட்சியங்கள் ஜோடித்தது பற்றி விசாரிக்காமல் 1997 ஊழல்தடுப்புச் சட்டத்தின் பகுதி 15-இன் அடிப்படையில் அதிகார அத்துமீறல் குறித்து விசாரித்தது.

“அச்சட்டத்தின் பகுதி 15-க்கும் சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டன என்ற புகார் பற்றிய விசாரணைக்கும் தொடர்பே இல்லை”, என்று மாட் ஜைன் கூறினார்.